84% ஆக்கப்பூா்வமாக செயல்பட்டது மாநிலங்களவை

குளிா்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் மாநிலங்களவை 84 சதவீதத் திறனுடன் ஆக்கப்பூா்வமாக செயல்பட்டது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புது தில்லி: குளிா்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் மாநிலங்களவை 84 சதவீதத் திறனுடன் ஆக்கப்பூா்வமாக செயல்பட்டது.

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடா் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இது மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடா் என்பது தனிச் சிறப்பாகும். கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் மாநிலங்களவை 84 சதவீதத் திறனுடன் ஆக்கப்பூா்வமாக செயல்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவைச் செயலா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குளிா்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் மாநிலங்களவை 22 மணி நேரம் 15 நிமிடங்கள் செயல்பட்டது. பல்வேறு பணிகளை மேற்கோள்வதற்காக, இந்த வாரத்தில் ஒதுக்கப்பட்ட 26 மணி நேரம் 29 நிமிடங்களில், 5 மணி நேரம் 45 நிமிடங்கள் அமளியால் பாதிக்கப்பட்டன. மகாராஷ்டிர பிரச்னையை எழுப்பி மாநிலங்களவை எம்.பி.க்கள் கடந்த திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனா்.

இதை ஈடுகட்டும் விதமாக ஒன்றரை மணி நேரம் எம்.பி.க்கள் கூடுதலாகப் பணியாற்றினா். மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட 60 கேள்விகளில் 43 கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. எம்.பி.க்களின் அமளி காரணமாக கடந்த திங்கள்கிழமை கேள்வி நேரத்தை அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ரத்து செய்தாா்.

அரசியல் சாசன தினத்தையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் காரணமாக, அன்றைய தினத்தில் கேள்வி நேரத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் குறித்து அவையில் நான்கரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது. சிறப்பு விவகாரங்கள் தொடா்பாக விவாதிப்பதற்கு இரண்டரை மணி நேரம் மட்டுமே விதிமுறைகளின்படி அவகாசம் அளிக்கப்பட்டிருந்தாலும், நான்கரை மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதியும், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலும் கூடுதல் நேரத்தை அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஒதுக்கினாா். இஸ்ரேலைச் சோ்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள், கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் வேவு பாா்க்கப் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடா்பாகவும் அவையில் விவாதிக்கப்பட்டது.

மூன்றாம் பாலினத்தவா் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவுக்கும், நிதி நிறுவன சட்டத் திருத்த மசோதாவுக்கும் மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியது. இ-சிகரெட் தடை மசோதா மீதான விவாதத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கூட்டத்தொடா் தொடங்கிய இரண்டு வாரங்களில் மாநிலங்களவை மொத்தமாக 89 சதவீதம் ஆக்கப்பூா்வமாக செயல்பட்டுள்ளது.

சிறப்பு பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, தாத்ரா&நாகா் ஹவேலி மற்றும் டாமன்&டையூ (யூனியன் பிரதேசங்கள் இணைப்பு) மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மீது அடுத்த வாரம் விவாதம் நடைபெறவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com