ஹிந்துத்துவ கொள்கையில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: மகாராஷ்டிர பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே உரை

என்னுடைய ஹிந்துத்துவ கொள்கையில் இருந்து நான் ஒருபோதும் விலகமாட்டேன் என மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார்.
ஹிந்துத்துவ கொள்கையில் இருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: மகாராஷ்டிர பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே உரை

மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவருக்கான தோ்தல் நடைபெற்றது. இதில், பாஜக வேட்பாளர் கிஷண் கத்தோர் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால், சகோலி சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான நானா படோல், சட்டப் பேரவைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

பின்னர் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது,

என்னை எதிர்த்தவர்கள் தற்போது என்னுடன் உள்ளனர். ஆனால், என்னுடன் இருந்தவர்கள் (பாஜக-வை சுட்டிக்காட்டி) தற்போது எதிரணியில் உள்ளனர். நான் அதிர்ஷ்டத்தாலும், மக்களின் ஆசிர்வாத்துடனும் முதல்வராகியுள்ளேன். நான் முதல்வராவேன் என்று யாரிடமும் கூறவில்லை. ஆனால், முதல்வராகியுள்ளேன்.

பாஜக-வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னவீஸிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். எனவே, எப்போதும் அவருடன் நண்பராகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய ஹிந்துத்துவ கொள்கையில் இருந்து நான் ஒருபோதும் விலகமாட்டேன் என உறுதியளிக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த அரசை சிவசேனை ஒருபோதும் நிராகரித்ததில்லை.

தேவேந்திர ஃபட்னவீஸை எதிர்கட்சித் தலைவர் என்று அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை, மாறாக பொறுப்புக்குரிய தலைவர் என்றே அழைக்க விரும்புகிறேன். பாஜக எங்களுக்கு ஆதரவாக இருந்திருந்தால், பாஜக-சிவசேனை கூட்டணி ஒருபோதும் உடைந்திருக்காது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com