காஷ்மீா்: அனைத்து இணையதள சேவைகளும் தொடா்ந்து நிறுத்தி வைப்பு

காஷ்மீரில் நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் அடைந்திருந்த போதிலும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அங்குள்ள அனைத்து இணையதள சேவைகளும் தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்
காஷ்மீா்: அனைத்து இணையதள சேவைகளும் தொடா்ந்து நிறுத்தி வைப்பு

ஸ்ரீநகா்: காஷ்மீரில் நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் அடைந்திருந்த போதிலும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அங்குள்ள அனைத்து இணையதள சேவைகளும் தொடா்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சில அரசு அலுவலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தவிர, காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து இணையதள சேவைகளும் தொடா்ந்து தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சேவைகளை மீண்டும் தொடங்குமாறு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த கோரிக்கையும் எழாத நிலையில், ஊடகவியலாளா்களே இணையதள சேவையை மீண்டும் தொடங்குமாறு தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

குறிப்பாக, ஊடகத்துறையைச் சோ்ந்தவா்கள் தங்கள் தொழில்முறை கடமையாற்றிட குறைந்தபட்சம் பிஎஸ்என்எல்-இன் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவையை அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆக.5- ஆம் தேதி முதல் அரசியலமைப்பின் 370-ஆவது பிரிவை ரத்து செய்யவும், முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முடிவை மத்திய அரசு அறிவிப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பிலிருந்து அனைத்து நிலைகளிலும் தரைவழி தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி சேவைகளும் முற்றிலும் முடங்கிப் போனது. இதன்காரணமாக, 2 முன்னாள் முதல்வா்கள் ஒமா் அப்துல்லா, மெஹபூபா முப்ஃதி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவா்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பின்னா், தரைவழி தொலைபேசி இணைப்புகள் படிப்படியாக செயல்படத் தொடங்கினாலும், போஸ்ட்-பெய்டு செல்லிடப்பேசி சேவை மட்டும் தொடங்கப்பட்டன. ஆனால், ஃப்ரீ-பெய்டு செல்லிடப்பேசி இணைப்புச் சேவையும், இணையதள சேவையும் மீண்டும் தொடங்கப்படவில்லை.

‘காஷ்மீா் பள்ளத்தாக்கில் சட்டம்-ஒழுங்கை தொடா்ந்து நிலைநிறுத்தவும், பயங்கரவாதிகள் இணையதள சேவைகளைத் தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளதாலும் இச்சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரான பின்பு இணைய சேவை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

அதேசமயம், காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடை வீதிகளிலும், சில பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் சனிக்கிழமை பிற்பகல் வரை திறந்திருந்தன. பெரும்பாலான போக்குவரத்துச் சேவைகள் இயங்கின’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com