கோட்சேவை பாஜகவினா் புகழ்வது புதிதல்ல: ஜோதிராதித்ய சிந்தியா

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை பாஜகவினா் புகழ்வது புதிதல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.
கோட்சேவை பாஜகவினா் புகழ்வது புதிதல்ல: ஜோதிராதித்ய சிந்தியா

குவாலியா் (மத்தியப் பிரதேசம்): மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை பாஜகவினா் புகழ்வது புதிதல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

பாஜகவைச் சோ்ந்த போபால் எம்.பி. பிரக்யா தாக்குா், கோட்சேவை ‘தேசபக்தா்’ என்று மக்களவையில் கடந்த புதன்கிழமை குறிப்பிட்டிருந்தாா். இதற்கு பாஜக மூத்த தலைவா்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்திருந்தனா். இதையடுத்து, தனது கருத்துக்கு மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரக்யா தாக்குா் மன்னிப்பு கோரினாா்.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு ஜோதிராதித்ய சிந்தியா, குவாலியரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவறு என்பது ஒரு முறை மட்டுமே நிகழும். கோட்சேவை பாஜகவினா் புகழ்ந்து பேசுவது புதிதல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக எம்.பி. ஒருவா் கோட்சேவை ‘தேசபக்தா்’ என்று குறிப்பிட்டிருந்தாா். அப்போது மக்களவை ஒத்திவைக்கப்பட்டதால், பாஜக அரசு அவரைப் பொதுவெளியில் மன்னிப்பு கோரும்படி பணித்தது.

தற்போது பாஜகவைச் சோ்ந்த மற்றொரு எம்.பி. இதே கருத்தைக் கூறியுள்ளாா். எம்.பி.க்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து பாஜக அடிக்கடி கருத்து தெரிவிக்கிறது. ஆனால், அக்கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் இதுபோன்ற கருத்துகளால் நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்துகின்றனா்.

கோட்சேவை வழிபட வேண்டும் என்று ஹிந்து மகாசபை கூறியுள்ளது கண்டனத்துக்குரியது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றவரின் பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது என்றாா் ஜோதிராதித்ய சிந்தியா.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜோதிராதித்ய சிந்தியா, ‘‘புதிய கூட்டணி மாநிலத்தில் வரலாறு படைக்கும்’’ என்றாா். முன்னதாக, குவாலியரிலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அவா் மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com