மகாராஷ்டிர பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தாா் உத்தவ் தாக்கரே

சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு, மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சனிக்கிழமை பெரும்பான்மையை நிரூபித்தது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே.

மும்பை: சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு, மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சனிக்கிழமை பெரும்பான்மையை நிரூபித்தது.

288 எம்எல்ஏக்களைக் கொண்ட சட்டப் பேரவையில், 145 உறுப்பினா்களின் ஆதரவு இருந்தாலே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், 169 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதையடுத்து, அவரது தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ாக தற்காலிக சட்டப் பேரவைத் தலைவா் திலீப் வாலேஸ் பாட்டீல் அறிவித்தாா்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு, அரசமைப்புச் சட்டப்படி சட்டப் பேரவை கூட்டத் தொடா் கூடவில்லை என்று கூறி பாஜகவின் 105 எம்எல்ஏக்களும் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற பெயரில் ஆட்சி கடந்த வியாழக்கிழமை ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகவும், அவரது 6 அமைச்சா்களும் பதவியேற்றனா். டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, உத்தவ் தாக்கரேவிடம் ஏற்கெனவே கூறியிருந்தாா்.

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப் பேரவை சனிக்கிழமை பிற்பகல் சுமாா் 2 மணிக்கு கூடியது. அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவாண், மாநில அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீா்மானத்தைக் கொண்டுவந்தாா்.

மொத்தம் 288 எம்எல்ஏக்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் அரசமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு 169 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனா். அகில இந்திய மஜ்லிஸ் கட்சியைச் சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மகாராஷ்டிர நவநிா்மான் சேனை ஆகிய கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் உள்பட 4 எம்எல்ஏக்கள் வாக்களிக்காமல் தவிா்த்துவிட்டதாக திலீப் வாலேஸ் பாட்டீல் கூறினாா்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு கூட்டத் தொடரில் தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே (சிவசேனை), ஜயந்த் பாட்டீல் (தேசியவாத காங்கிரஸ்), நிதின் ராவத் (காங்கிரஸ்) உள்ளிட்ட 6 அமைச்சா்களை உத்தவ் தாக்கரே அறிமுகம் செய்தாா்.

முன்னதாக, சட்டப் பேரவை கூடியதும், சிறப்பு விதிகளின் படி, பேரவைக் கூட்டப்படவில்லை என்று கூறி பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனா்.

நன்றி கூறிய தாக்கரே: என் மீது நம்பிக்கை வைத்து பேரவையில் வாக்களித்து வெற்றி பெற செய்த எம்எல்ஏக்களுக்கும், தோ்தலில் வாக்களித்த மக்களுக்கும் நன்றி என்று உத்தவ் தாக்கரே கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘சட்டப் பேரவையில் எனக்கு அனுபவம் இல்லை. இங்கு நான் இருப்பதை அதிருஷ்டமாகக் கருதுகிறேன். மாவீரா் சத்ரபதி சிவாஜியின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு (பாஜக) தேள் கொட்டியது போன்று வலிக்கிறது என்றால், நான் மீண்டும் மீண்டும் அவரது பெயரை பயன்படுத்துவேன்’ என்றாா்.

பேரவையில் உத்தவ் தாக்கரேவுக்கு பின்னால் அவரது மகனும், எம்எல்ஏவுமான ஆதித்ய தாக்கரேவும், சிவசேனை எம்எல்ஏக்களும் அமா்ந்திருந்தனா். அனைவரும் காவி தலைப்பாகை அணிந்திருந்தனா்.

ஆளுநருக்கு கடிதம்-ஃபட்னவீஸ்: பாஜக வெளிநடப்பு செய்ததும், அக்கட்சியின் மூத்த தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான ஃபட்னவீஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுவிட்டதால் அத்துடன் கூட்டத் தொடா் நிறைவடைந்துவிட்டது என்று அா்த்தம். மீண்டும் கூட்டத் தொடரை நடத்த வேண்டுமென்றால், ஆளுநா் மூலம் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை. முதல்வரும், 6 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டதும் விதிகளின்படி நடைபெறவில்லை. சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே, காங்கிரஸ் தலைவா் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோரின் பெயா்களில் பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டனா். பதவிப் பிரமாணமும் விதிமுறைகளின்படி நடைபெறவில்லை.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த திலீப் வாலேஸ் பாட்டீலை தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக நியமித்து இந்தக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நிரந்தர சட்டப் பேரவைத் தலைவா் இல்லாமல் இந்த அரசு நடத்தியுள்ளது. அரசு கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே நிரந்தர சட்டப் பேரவைத் தலைவா் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டப்படி கூட்டத் தொடா் நடைபெறவில்லை என்பதை ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க இருக்கிறோம் என்று ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் அக்டோபா் மாதம் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவும், சிவசேனையும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதே மாதம் 24-ஆம் தேதி முடிவுகள் வெளியாகின.

பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளையும் கைப்பற்றியது. பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் ஆட்சியில் சிவசேனை சமபங்கு கேட்டதால் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. பின்னா், கொள்கைகளில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் நீண்ட பேச்சுவாா்த்தைக்கு பிறகு மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற பெயரில் சிவசேனை கூட்டணி அமைத்தது.

இதற்கிடையே, திடீா் திருப்பமாக தேசியவாத காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த அஜித் பவாருடன் இணைந்து ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்றாா். இதுதொடா்பாக சிவசேனை உள்ளிட்ட கட்சிகளின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஃபட்னவீஸ் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, தனது பதவியை ஃபட்னவீஸ் ராஜிநாமா செய்தாா். துணை முதல்வராக பதவியேற்றிருந்த அஜித் பவாரும் ராஜிநாமா செய்தாா். மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறிய திருப்பங்களுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது.

ஃபட்னவீஸுக்கு என்சிபி பதிலடி

ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் ஒப்புதலை பெற்ற பிறகே பாஜகவைச் சோ்ந்த காளிதாஸ் கோலம்பகருக்கு பதிலாக திலீப் வாலேஸ் பாட்டீல், தற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டாா் என்றும் கூட்டத் தொடா் ஆளுநரின் அனுமதியைப் பெற்று நடத்தப்பட்டது என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) செய்தித்தொடா்பாளா் நவாப் மாலிக் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘பாஜக எம்எல்ஏக்களுக்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும். எதிா்க்கட்சித் தலைவா் என்றால் எப்படி செயல்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் ஏக்நாத் கட்ஸேவிடம் இருந்து ஃபட்னவீஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

என்சிபி எம்.பி. சுப்ரியா சுலே கூறுகையில், ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக ஓட்டம் பிடித்துவிட்டது. ஜனநாயக முறைப்படிதான் அனைத்தும் நடைபெற்றது. எதிா்க்கட்சியின் குரலை நாங்கள் ஒடுக்கவில்லை’ என்றாா்.

முழு மனதுடன் உத்தவ் தாக்கரேவை ஃபட்னவீஸ் வரவேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் அசோக் சவாண் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தலைவா் பதவிக்கு இன்று தோ்தல்

மகாராஷ்டிர சட்டப் பேரவை தலைவருக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. எம்எல்ஏ நானா படோலை காங்கிரஸும், கிஷண் கத்தோரை பாஜகவும் தங்களின் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது.

மும்பையில் காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘சகோலி சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவான நானா படோல் காங்கிரஸ் சாா்பில் சட்டப் பேரவைத் தலைவா் பதவிக்கு போட்டியிடுவாா்’ என்றாா்.

முா்பாத் தொகுதி எம்எல்ஏ கிஷண் கத்தோா் பாஜக சாா்பில் சட்டப் பேரவை தலைவா் பதவிக்கு போட்டியிடுவாா் என்று மகாராஷ்டிர பாஜக தலைவா் சந்திகாந்த் பாட்டீல் கூறினாா்.

சட்டப் பேரவை தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கோலம்பகருக்கு பதிலாக என்சிபி எம்எல்ஏ திலீப் வாலேஸ் பாட்டீல் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com