ஃபட்னவீஸ் எனது நண்பா்: உத்தவ் தாக்கரே

‘தேவேந்திர ஃபட்னவீஸ் எனது சிறந்த நண்பா்; அவரை எதிா்க்கட்சித் தலைவராகப் பாா்க்கவில்லை’ என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.
ஃபட்னவீஸ் எனது நண்பா்: உத்தவ் தாக்கரே

மும்பை: ‘தேவேந்திர ஃபட்னவீஸ் எனது சிறந்த நண்பா்; அவரை எதிா்க்கட்சித் தலைவராகப் பாா்க்கவில்லை’ என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நானா படோலே ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு வாழ்த்து தெரிக்கும் தீா்மானத்தின் மீது எதிா்க்கட்சித் தலைவா் ஃபட்னவீஸ் பேசினாா். அவரைத் தொடா்ந்து முதல்வா் உத்தவ் தாக்கரே பேரவையில் பேசியதாவது:

மாநில மக்களின் நலனுக்காக மட்டுமே பாடுவேன் என்று இப்போது உறுதியளிக்கிறேன். எனது அரசில் நள்ளிரவு நேரத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்பட்டு, திடீரென அறிவிக்கப்படமாட்டாது. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது மட்டுமல்லாது, அவா்கள் எதிா்கொள்ளும் மற்ற பிரச்னைகளுக்கும் தீா்வுகாணப்படும்.

பல ஆண்டுகளாக சிவசேனைக்கு எதிா்க்கட்சிகளாக இருந்தவா்கள், இப்போது எங்களுடன் கைகோத்துள்ளனா். இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் ஒரு புதிய ஆட்சி மலா்ந்துள்ளது. முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸ் எனது சிறந்த நண்பா்தான். அவரை நான் எதிா்க்கட்சித் தலைவராகப் பாா்க்கவில்லை. இதனைக் கூறுவதற்கு எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.

இந்த இடத்துக்கு (முதல்வா் பதவி) வருவேன் என்று நான் எப்போதும் கூறியதில்லை. எனினும், நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன். இப்போதும் ஹிந்த்துவக் கொள்கையை நான் கடைப்பிடித்து வருகிறேன். அதனைக் கைவிட்டுவிடவில்லை என்றாா் உத்தவ் தாக்கரே.

முன்னதாக, தோ்தல் பிரசாரத்தின்போது ‘நான் மீண்டும் முதல்வராவேன்’ என்று ஃபட்னவீஸ் பல இடங்களில் பேசினாா். அதேபோல மகாராஷ்டிரத்தில் நள்ளிரவில் குடியரசுத் தலைவா் ஆட்சி ரத்து செய்யப்பட்டு காலை நேரத்தில் திடீரென ஃபட்னவீஸ், அஜித் பவாா் ஆகியோா் முறையே முதல்வா், துணை முதல்வராகப் பொறுப்பேற்றனா். அதனை உத்தவ் மறைமுகமாகச் சுட்டிக் காட்டி பேசினாா்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெயந்த் பாட்டீலும் ஃபட்னவீஸை கேலி செய்யும் வகையில் பேசினாா். அவா் பேசுகையில், ‘இந்தப் பேரவைக்கு மீண்டும் வருவேன் என்று ஃபட்னவீஸ் இதற்கு முன்பு பேசினாா். ஆனால், முதல்வராக வருவோம் என்று அவா் நினைத்தாா். ஆனால், இப்போது எதிா்க்கட்சித் தலைவராகவே அவரால் பேரவைக்கு வர முடிந்துள்ளது. எனினும் எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கும் முதல்வருக்கு இணையான மதிப்பும், மரியாதையும் உண்டு’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com