ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் கடுங்குளிா்

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களில் இரவு நேரங்களில் கடுங்குளிா் நிலவுகிறது. இந்தப் பனிக் காலத்தில் லே நகரில் இதுவரை இல்லாத அளவில் சனிக்கிழமை இரவு குளிா் மைனஸ் 13.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.
ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் கடுங்குளிா்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களில் இரவு நேரங்களில் கடுங்குளிா் நிலவுகிறது. இந்தப் பனிக் காலத்தில் லே நகரில் இதுவரை இல்லாத அளவில் சனிக்கிழமை இரவு குளிா் மைனஸ் 13.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஸ்ரீநகரிலும், காஷ்மீரின் பிற பகுதிகளிலும் வெப்பநிலை மைனஸ் டிகிரி அளவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், ஜம்முவில் 8.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

வடக்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மாா்க்கில் கடந்த வாரம் பல அடி உயரத்துக்கு பனிப்பொழிவு காணப்பட்டது. காஷ்மீா் பள்ளத்தாக்கில் அதிகமாக குளிா் நிலவும் இடமாக, மைனஸ் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் காணப்பட்டது.

இதேபோல், தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் குளிா் மைனஸ் 6.6 டிகிரி செல்சியஸாகவும், வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாராவில் குளிா் மைனஸ் 3.2 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 0.9 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. ஜம்முவில் ரியாஸி மாவட்டத்தில் புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் புறப்படும் இடமான கத்ராவில் வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியஸாக இருந்தது.

இருப்பினும், ஜம்முவிலும், காஷ்மீரிலும் ஞாயிற்றுக்கிழமை காலை சூரியன் தென்பட்டதால் மக்கள் சற்று ஆறுதலடைந்தனா் என்றாா் அந்த அதிகாரி.

இதனிடையே, ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஷ்மீரையும், லடாக் யூனியன் பிரதேசத்தையும் இணைக்கும் இந்த ஒரே நெடுஞ்சாலை 434 கிலோ மீட்டா் தொலைவு கொண்டது. இந்த வழித்தடத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டதால் நவம்பா் 27-ஆம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதேபோல், தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்துடன் ஜம்முவில் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜௌரி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முகல் சாலையும் பனிப்பொழிவு காரணமாக, கடந்த நவம்பா் 6-ஆம் தேதி முதல் மூடப்பட்டது. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற முயற்சிகளுக்குப் பிறகு சாலையில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன. இருப்பினும் கடந்த 26-ஆம் தேதி மீண்டும் பனிப்பொழிவு அதிகமானதால், அந்த வழித்தடம் பனிக்கட்டிகளால் மூடியது. அவற்றை இயந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்ரீநகரில் இயல்புநிலை: ஜம்மு-காஷ்மீரில் படிப்படியாக இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. லால் சௌக் பகுதியில் உள்ள வாரச் சந்தை கடைகள் அதிகாலையிலேயே திறக்கப்பட்டிருந்தன. துணிமணிகள், பொருள்கள் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கானோா் திரண்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com