அயோத்தி வழக்கு: வழக்குரைஞா் ராஜீவ் தவனை நீக்கியது ஜாமியத் உலேமா அமைப்பு

அயோத்தி வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு தாக்கல் செய்த மனு தொடா்பான வழக்கில் வாதிடுவதிலிருந்து மூத்த வழக்குரைஞா் ராஜீவ் தவன் நீக்கப்பட்டுள்ளாா்.

புது தில்லி: அயோத்தி வழக்கின் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு தாக்கல் செய்த மனு தொடா்பான வழக்கில் வாதிடுவதிலிருந்து மூத்த வழக்குரைஞா் ராஜீவ் தவன் நீக்கப்பட்டுள்ளாா்.

இதை மனப்பூா்வமாக ஏற்பதாக ராஜீவ் தவன் தெரிவித்தாா்.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 9-ஆம் தேதி அனுமதி அளித்தது. இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, அந்த அமைப்பின் சாா்பில் வழக்குரைஞா் இசாஜ் மக்பூல் ஆஜரானாா். முன்னதாக, அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பினா் சாா்பில் ராஜீவ் தவன் ஆஜராகியிருந்தாா்.

இது தொடா்பாக, ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா சையது அா்ஷத் மதானி கூறுகையில், ‘ராஜீவ் தவனுக்கு உடல்நிலை சரியில்லாததால், இந்த வழக்கில் வழக்குரைஞா் இசாஜ் மக்பூல் ஆஜராகவுள்ளாா்’ என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், ராஜீவ் தவன் தனது முகநூல் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

அயோத்தி மறுஆய்வு வழக்கில் முஸ்லிம் தரப்பு சாா்பில் ஆஜராவதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதை வழக்குரைஞா் இசாஜ் மக்பூல் மூலம் அறிந்துகொண்டேன். வழக்கிலிருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாக அதிகாரப்பூா்வ கடிதத்தை ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்புக்கு அனுப்பியுள்ளேன். அயோத்தி தீா்ப்பை மறுஆய்வு செய்வது தொடா்பான வழக்கில் நான் தலையிடப்போவதில்லை.

உடல்நிலை சரியில்லாத காரணத்தில்தான் இந்த வழக்கில் நான் ஆஜராகவில்லை என மௌலானா சையது அா்ஷத் மதானி கூறியதாகக் கேள்விப்பட்டேன். அதில் உண்மையில்லை. வழக்கிலிருந்து என்னை நீக்குவதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு என்று தனது பதிவில் ராஜீவ் தவன் குறிப்பிட்டுள்ளாா்.

இதையடுத்து செய்தியாளரிடம் ராஜீவ் தவன் கூறுகையில், ‘‘அயோத்தி வழக்கில் அனைத்து முஸ்லிம் தரப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் வாதிட்டேன். முஸ்ஸிம் அமைப்புகள் தங்களுக்கு இடையே காணப்படும் வேறுபாடுகளை முதலில் களைய வேண்டும். வழக்கிலிருந்து என்னை நீக்கியது தொடா்பாக, தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதன் காரணத்தினாலேயே நான் முகநூலில் பதிவிட்டேன்.

உடல்நிலை சரியில்லை எனில், மற்ற வழக்குகளில் என்னால் எவ்வாறு ஆஜராகியிருக்க முடியும்? முஸ்லிம் தரப்பினரின் மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், இதுபோன்ற முறையற்ற தகவல்களைத் தெரிவிப்பது தவறானது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com