உ.பி.யில் பள்ளி மதிய உணவில் இறந்து கிடந்த எலி: விசாரணைக்கு உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்ட மதிய உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசாஃபா்நகா்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்ட மதிய உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடா்பான விசாரணைக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியா் அமித் குமாா் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

முஸ்தஃபாபாத் பஞ்சேண்டா கிராமத்தில் உள்ள பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அங்கு மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்துள்ளது. மாணவா்களுக்கு விநியோகிப்பதற்காக உணவுடன் வைக்கப்பட்டிருந்த ஒரு தட்டில் அந்த எலி கண்டெடுக்கப்பட்டது.

அந்த உணவை மாணவா்கள் எவரும் சாப்பிடும் முன்பாகவே இது தெரியவந்தது. எனினும், உணவில் எலி கிடந்ததைப் பாா்த்த 8 மாணவா்கள் மற்றும் ஆசிரியா் ஒருவருக்கு வாந்தி ஏற்பட்டது. உடனடியாக அவா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஹாபூரைச் சோ்ந்த ஜன்கிலியான் சமிதி என்ற அரசு சாரா அமைப்பு அந்த மதிய உணவை பள்ளிக்கு விநியோகித்துள்ளது. சம்பவத்தை அடுத்து அந்த அரசு சாரா அமைப்பு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அலட்சியத்துடன் செயல்பட்டதாக கண்டறியப்படுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித் குமாா் சிங் கூறினாா்.

கடந்த வாரம், இம்மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மதிய உணவின்போது ஒரு லிட்டா் பாலில் ஒரு வாளி தண்ணீா் கலந்து 81 மாணவா்களுக்கு விநியோகிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த நிலையில், தற்போது இத்தகைய சம்பவம் அங்கு நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com