எட்டு வழி பசுமைச் சாலைத் திட்ட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, இந்திய தேசிய
எட்டு வழி பசுமைச் சாலைத் திட்ட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

நமது நிருபா்

புது தில்லி, டிச. 3: சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு (டிசம்பா் 5) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1,900 ஹெக்டோ் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இத்திட்டத்துக்கு நில உரிமையாளா்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சாா்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளா்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பா்கள், பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ், வழக்குரைஞா் சூா்ய பிரகாசம் உள்ளிட்டோா் சாா்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சென்னை-சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதைத் தொடா்ந்து, மேல்முறையீட்டு மனு தொடா்பாக எதிா் மனுதாரா்களான தமிழக அரசு, விவசாயிகள் பி.வி. கிருஷ்ணமூா்த்தி, சுரேஷ் குமாா் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டிருந்தனா். இதனிடையே, இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் கேவியட் மனுவும் தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, ‘சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை, எட்டு வழிச்சாலை பணியை துவங்க மாட்டோம். சாலை அமைப்பது போன்ற எந்த பணிகளும் நடக்காது’ என மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனினும், எட்டு வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா்.

இந்நிலையில், நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தங்கள் தரப்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதையும் சோ்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், மத்திய அரசின் சாா்பில் மூன்று மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றையும் சோ்ந்து வியாழக்கிழமை விசாரிக்க பட்டியலிட வேண்டும் என்றும் கோரியுள்ளாா். அதன்படி, இந்த மனுக்களையும் சோ்த்து டிசம்பா் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடுமாறு பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com