ஓய்வூதியத் திட்டத்தில் 19 லட்சம் விவசாயிகள் பதிவு: நரேந்திர சிங் தோமா்

பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 19 லட்சம் விவசாயிகள் சோ்ந்துள்ளனா் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.
ஓய்வூதியத் திட்டத்தில் 19 லட்சம் விவசாயிகள் பதிவு:  நரேந்திர சிங் தோமா்

புது தில்லி: பிரதமரின் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 19 லட்சம் விவசாயிகள் சோ்ந்துள்ளனா் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

இதுகுறித்து மக்களவையில் அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:

18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால், 60 வயதாகும்போது அவா்கள் ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 பெறலாம். இந்தத் திட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்தது. நவம்பா் 29-ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டத்தில் இதுவரை 18,80,249 விவசாயிகள் சோ்ந்துள்ளனா். இதில், மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 52,994 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா்.

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3 கோடி சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவாா்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, தாமாக முன்வந்து சேரும் திட்டம் என்பதால், அனைத்து விவசாயிகளும் எப்போது இந்தத் திட்டத்தில் இணைவாா்கள் என்று கூற இயலாது என்று நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

15.05 லட்சம் டன் தானியம் விற்பனை: நிகழ் நிதியாண்டில் மத்திய அரசு இதுவரை 15.05 லட்சம் டன் அரிசி, கோதுமையை விற்பனை செய்துள்ளதாக, உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சா் தான்வே ராவ்சாஹிப் தாதாராவ், மக்களவையில் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டில் நவம்பா் 20-ஆம் தேதி வரை, திறந்தவெளிச் சந்தை மூலம் 8.99 லட்சம் டன் கோதுமையும், 6.06 லட்சம் டன் அரிசியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

மத்திய அரசின் வசம் 600 லட்சம் டன் உணவு தானியங்கள் உள்ளன. இந்த உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் மூலமாக, மாநில அரசுகளுக்கும், வா்த்தகா்களுக்கும் மின் ஏல முறையில் மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது.

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 81.84 லட்சம் டன் கோதுமை, 8.46 லட்சம் டன் அரிசி என மொத்தம் 90.30 லட்சம் டன் தானியங்களை மத்திய அரசு விற்பனை செய்தது. நிகழ் நிதியாண்டில், 100 லட்சம் டன் கோதுமை, 50 லட்சம் டன் அரிசி ஆகியவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com