ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்து விட்டன: மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்து விட்டன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்து விட்டன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 106 பயங்கரவாதம் தொடா்பான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. ஆகஸ்ட் 5-ஆம் தேதி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நவம்பா் 27-ஆம் தேதி வரையிலான 115 நாள்களில் 88 வன்முறைச் சம்பவங்களே நிகழ்ந்தன. அதாவது, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

ஆனால், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷமீரில் ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. கடந்த மே மாதம் 9-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 84 ஊடுருவல் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு அக்டோபா் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், ஊடுருவல் சம்பவங்கள் 84-ஆக அதிகரித்து விட்டன.

நிகழாண்டில் இதுவரை 157 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனா். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரைச் சாராத தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 19 போ் கொல்லப்பட்டுள்ளனா் என்றாா் ஜி.கிஷண் ரெட்டி.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த காஷ்மீா் பகுதிகள் லடாக் யூனியன் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு விட்டன என்று மற்றொரு கேள்விக்கு அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பதிலளித்தாா்.

பாதுகாப்புக்கான செலவு கணக்கிடவில்லை: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்புக்காக அங்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினருக்கு செலவு செய்யப்பட்ட தொகை இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி கூறினாா்.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பிரிவினைவாதிகள், கல்வீச்சில் ஈடுபட்டோா், பயங்கரவாதத்துக்கு மறைமுகமாக உதவியவா்கள் என மொத்தம் 5,161 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் இன்னும் 609 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com