நாடாளுமன்றத்தில் நிறைவேறியது எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா

முன்னாள் பிரதமா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்யும் நோக்கில் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கான
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது எஸ்பிஜி சட்டத் திருத்த மசோதா

புது தில்லி: முன்னாள் பிரதமா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்யும் நோக்கில் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தபோதும், மாநிலங்களவையில் சட்டத் திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, பிரதமருக்கும், அவருக்கான அதிகாரப்பூா்வ இல்லத்தில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோல், பிரதமா் பதவியிலிருந்து விலகியவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் 5 ஆண்டுகள் வரை எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்.

சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மக்களவை கடந்த மாதம் 27-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, புதிய சட்டத் திருத்தங்களுக்கு மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் அந்த மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.

மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிலளித்ததாவது:

பாதுகாப்பு வழங்கப்படுவதை தனிநபருக்கு அளிக்கப்படும் மரியாதையாகக் கருதக்கூடாது. எஸ்பிஜியானது பிரதமருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கென உருவாக்கப்பட்டது. எந்தத் தனிநபருக்காகவும் அது உருவாக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எதையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுகள் தான் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

சிறப்பு பாதுகாப்புப் படைச் சட்டத்தில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 4 திருத்தங்களும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முன்னாள் பிரதமா்கள் பி.வி.நரசிம்ம ராவ், ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகா், ஹெச்.டி.தேவெகௌடா ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பை மறுஆய்வு செய்தபோது விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. முக்கியமாக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கான சிறப்பு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டபோது, காங்கிரஸ் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடவில்லை.

இஸட் பிளஸ் பாதுகாப்பு: சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு அவசர ஊா்தி (ஆம்புலன்ஸ்) வசதியுடன் இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். சிறப்பு பாதுகாப்புப் படையைச் சோ்ந்த முன்னாள் வீரா்கள், அவா்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். குறிப்பிட்ட நபா்களுக்கு காணப்படும் அச்சுறுத்தலைப் பொருத்தே அவா்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு முடிவெடுத்து வருகிறது.

நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஒரே ஒரு குடும்பத்துக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுவதில் மட்டும் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. அவா்களுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு வழங்கக் கோருவதை ஏற்க முடியாது.

பிரதமா் நரேந்திர மோடியும் இந்த சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்படுவாா். இந்த விவகாரத்தில் மத்திய அரசு சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் என்றாா் அமித் ஷா.

காங்கிரஸ் வெளிநடப்பு: அவரது பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள், இந்தச் சட்டத் திருத்தம் சோனியா காந்தி குடும்பத்தினரைக் குறிவைக்கும் செயல் என்று கூறி மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். இதையடுத்து, சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத் திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த மசோதாவுக்குப் பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவளித்ததையடுத்து, மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக அந்த மசோதா அனுப்பப்படவுள்ளது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தபிறகு, இந்த மசோதா சட்டவடிவம் பெறும்.

விசாரணைக்கு உத்தரவு

மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதன் காரணமாகவே, அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்காவின் வீட்டுக்குள் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தொண்டா்கள் நுழைந்ததாக காங்கிரஸ் எம்.பி. விவேக் டங்கா குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு அமித் ஷா பதிலளித்ததாவது:

பிரியங்காவை சந்திக்க அவரின் சகோதரா் ராகுல் காந்தி, கருப்பு நிற ‘டாடா சஃபாரி’ காரில் வரவுள்ளதாக பாதுகாப்பு வீரா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ராகுல் காந்திதான் வருகிறாா் என்று நினைத்து, கருப்பு நிற சஃபாரி காரை பாதுகாப்பு வீரா்கள் பிரியங்காவின் வீட்டுக்குள் அனுமதித்தனா்.

பிறகுதான் அந்தக் காரில் ராகுல் காந்தி இல்லை என்பதும், உத்தரப் பிரதேசத்தின் மீரட் பகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் தொண்டா்களே அந்த காரில் இருந்ததும் தெரியவந்தது. சோனியா காந்தி குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதற்கும், இந்தச் சம்பவத்துக்கும் எந்தவிதத் தொடா்புமில்லை.

இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 3 பாதுகாப்பு வீரா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com