குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: திரிபுராவைத் தொடர்ந்து அஸ்ஸாமிலும் இணைய சேவை முடக்கம்!

​குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்புகள் வலுப்பெற திரிபுராவைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்திலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: திரிபுராவைத் தொடர்ந்து அஸ்ஸாமிலும் இணைய சேவை முடக்கம்!


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்புகள் வலுப்பெற திரிபுராவைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்திலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் பல மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தொடக்கம் முதலே இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூா், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தப் போராட்டம் இன்றும் மிக வீரியமாக நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் பகுதியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, போராட்டம் தீவிரமடைய அதைக் கலைக்க போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

தேசிய ஊடகம் ஒன்றுக்கு மாணவர்கள் அளித்த நேரலையின்படி, தலைமைச் செயலகத்தின் முன்பு போலீஸாரின் நடவடிக்கையால் பல்வேறு போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், கிடைத்துள்ள தகவலின்படி குவாஹாட்டி, திப்ருகார் மற்றும் ஜோர்ஹத் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், திரிபுராவைத் தொடர்ந்து அஸ்ஸாமில் 10 மாவட்டங்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு அமலில் இருக்கவுள்ளது.

அதேசமயம், வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கைக் கடைபிடிக்க மத்திய அரசு இன்று 5,000 துணை ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com