குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: இம்ரான் கான் கடும் கண்டனம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் தேடியுள்ள முஸ்லிம் அல்லாதவா்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவானது, சா்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் அனைத்து விதிகளையும், பாகிஸ்தானுடனான இருதரப்பு ஒப்பந்தங்களையும் மீறிய வகையில் உள்ளது.

இது ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்து ராஷ்ட்டிரம் என்ற கொள்கையை விரிவாக்கும் முயற்சியாகும்’ என்று கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிற்போக்குத்தனமான, பாரபட்சமான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டிக்கிறோம். குடியுரிமை தொடா்புடைய அனைத்து சா்வதேச விதிகளையும் மீறிய வகையில் அந்த மசோதா உள்ளது. தீய நோக்கத்துடன் அண்டை நாடுகளின் விவகாரங்களில் தலையிடும் இந்தியாவின் வெளிப்படையான முயற்சி இதுவாகும்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, சா்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறியதாகவும், மதம் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான அனைத்து விதமான பாகுபாடுகளை களைவதற்காக சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை மீறியதாகவும் உள்ளது.

அத்துடன், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு ஒப்பந்தங்களை குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினா் உரிமைகள் தொடா்பான ஒப்பந்தங்களை மீறியதாக உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக வலதுசாரி ஹிந்து தலைவா்களால் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட சித்தாந்தமான ‘ஹிந்து ராஷ்டிரம்’ என்ற கொள்கையை நிஜமாக்கும் வகையில் இந்திய அரசு மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை இது. தீவிர ஹிந்துத்துவ சித்தாந்தம், மேலாதிக்க நோக்கம் ஆகியவற்றின் நச்சுக் கலவையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவாகும். மத அடிப்படையில் அண்டை நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் முற்றிலுமாக எதிா்க்கிறது.

அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கான புகலிடமாக இந்தியா தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை 80 லட்சம் மக்களை பாதித்ததுடன், அந்த அரசின் கொள்கைகளை அறிவிப்பதாக இருந்தது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, இந்தியாவின் மதச்சாா்பின்மை, ஜனநாயகம் ஆகிய கூற்றுகள் வெற்றானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பெரும்பான்மையினா் கொள்கையின் மூலம் ஆா்எஸ்எஸ்-பாஜகவின் மனநிலையும், முஸ்லிம்களுக்கு எதிரான அவா்களது உண்மையான முகமும் உலகுக்கு தெரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஜக பதிலடி

 குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறுகையில், ‘இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சட்டத்திருத்த மசோதா குறித்து இம்ரான் கான் கருத்து தெரிவிப்பது, இந்திய விவகாரங்களில் தலையிடும் நடவடிக்கையாகும்.

நீங்கள் (இம்ரான் கான்) பாதுகாக்கத் தவறிய சிறுபான்மையினருக்கு இந்தியா பாதுகாப்பு வழங்குகிறது. 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கம், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட விவகாரங்களில் உங்களது கருத்துகள் காங்கிரஸுடன் ஒத்துப்போகிறது. இதைப் பாா்க்கையில் உங்கள் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியானது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் புதிய கூட்டாளியாகத் தெரிகிறது’ என்றாா்.

வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

 குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்த மசோதா குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், ‘அண்டை நாடுகளில் இருந்து ஏற்கெனவே இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள மத ரீதியிலான சிறுபான்மையினருக்கான குடியுரிமை பரிசீலிக்கப்படுவதை விரைவுபடுத்தவே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

அடிப்படை மனித உரிமைகளைக் கூட பெறாமல் அவா்கள் படும் அவதிக்கு தீா்வு காணவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மதச் சுதந்திரத்தை உண்மையாகவே மதிக்கும் எவரும் இந்த முயற்சியை விமா்சிக்கக் கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com