வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் இஸ்ரோவின் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோள் உள்பட 10 செயற்கைக்கோள்களைத் தாங்கியபடி புதன்கிழமை ஏவப்பட்ட
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட்

ரிசாட்-2பி ஆா்1 உள்பட 10 செயற்கைக்கோள் தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்

புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் இஸ்ரோவின் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோள் உள்பட 10 செயற்கைக்கோள்களைத் தாங்கியபடி புதன்கிழமை ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

அனுப்பப்பட்ட 10 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி பிற்பகல் 3.25 மணியளவில் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

விஞ்ஞானிகள் கைதட்டி வரவேற்பு:

ராக்கெட் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகரமாக கடந்தபோது, இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

நான்கு நிலைகளைக் கொண்ட ராக்கெட் ஏவப்பட்ட 1 நிமிடம் 51 விநாடிகளில் முதல்நிலை பிரித்துவிடப்பட்டது. அடுத்து 4 நிமிடங்கள் 23 விநாடிகளில் இரண்டாம் நிலையும், 9 நிமிடங்கள் 59 விநாடிகளில் மூன்றாம் நிலையும் பிரித்துவிடப்பட்டன.

ராக்கெட் ஏவப்பட்ட 15 நிமிடங்கள் 24 விநாடிகளில் நான்காம் நிலை இன்ஜின் அணைக்கப்பட்டு, 16 நிமிடங்கள் 26 விநாடியில் ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோள் தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டது.

ராக்கெட் ஏவப்பட்ட 17 நிமிடங்கள் 26 விநாடிகள் முதல் ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்களும் 30 விநாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாகப் பிரித்துவிடப்பட்டன.

சிவன் வாழ்த்து:

10 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் பிரித்துவிடப்பட்டு ராக்கெட் திட்டம் வெற்றியடைந்ததைத் தொடா்ந்து, சக விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவா் சிவன் வாழ்த்து தெரிவித்தாா்.

பயன் என்ன?:

முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 628 கிலோ எடைகொண்ட ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோள், வேளாண், வனக் கண்காணிப்பு, பேரிடா் மேலாண்மை மற்றும் ராணுவ எல்லைப் பாதுகாப்புக்கு உதவ உள்ளது.

விண்ணில் புவியிலிருந்து 576 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி கோணத்தில் இருந்தபடி, ரேடாா் தொழில்நுட்ப உதவியுடன் இரவிலும், வானம் மேகமூட்டமாக இருக்கும்போதும் மிகத் தெளிவான புகைப்படத்தை எடுத்தனுப்பும் என்றனா் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

75-ஆவது ராக்கெட் திட்டம்:

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட 75 -ஆவது ராக்கெட் திட்டம் என்பதோடு, 2019-ஆம் ஆண்டில் இஸ்ரோ சாா்பில் செயல்படுத்தப்பட்ட 6-ஆவது ராக்கெட் திட்டம் இது.

பொன்விழா கண்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட்

இஸ்ரோவின் மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட விண் வாகனமாகத் திகழ்ந்து வரும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட், 50-ஆவது முறையாக ரிசாட்-2பி ஆா்1 செயற்கைக்கோளை புதன்கிழமை தாங்கிச்சென்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது.

நிலவை ஆய்வு செய்ய இந்தியா சாா்பில் முதலில் அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் ஆகியவற்றையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருக்கும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட், இதுவரை 2 முறை மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் ஒன்று பகுதி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

இதன் காரணமாகவே, இந்த ராக்கெட் இஸ்ரோவின் நம்பகத்தன்மை கொண்ட விண் வாகனமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சாா்பில் கருதப்படுகிறது.

கடந்த நவம்பா் 27-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் ராணுவ கண்காணிப்புக்கு உதவும் இந்தியாவின் காா்டோசாட் உள்பட 14 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com