நரேந்திர மோடி இப்படிதான் பிரதமரானார்: ராகுல் பாய்ச்சல்!

சாதி, மதம் அடிப்படையில் மக்களைப் பிரித்துதான் நரேந்திர மோடி பிரதமரானார் என்று ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.
நரேந்திர மோடி இப்படிதான் பிரதமரானார்: ராகுல் பாய்ச்சல்!

சாதி, மதம் அடிப்படையில் மக்களைப் பிரித்துதான் நரேந்திர மோடி பிரதமரானார் என்று ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 

"நரேந்திர மோடிக்கு பயம் கொண்ட இந்தியாதான் தேவை. அவருக்கு இந்திய மக்கள் வலிமையற்றவர்களாகவும், பிரிவுற்றும் இருக்க வேண்டும். சாதி, மதம் மற்றும் பிராந்திய அடிப்படையில் மக்களைப் பிரித்துதான் அவர் பிரதமரானார்.

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், நரேந்திர மோடி வேறு ஒரு உலகத்தில் இருப்பதால் அவருக்கு தெரியாமல் இருக்கலாம். விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் கவலையில் உள்ளனர். ஆனால், நரேந்திர மோடி 15-20 தொழிலதிபர்களுக்கு பணம் கொடுத்துள்ளதால் அதானி மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இது இந்திய மக்களின் பணம். ஜார்க்கண்டுக்கு சொந்தமான பணம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பொது மக்கள் வங்கிகளின் வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால், மிகப் பெரிய தொழிலதிபர்களான இவர்கள் அதே நேரத்தில் தங்களது கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றினர். இதற்கான வாய்ப்பை நரேந்திர மோடி அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தார்.

நாங்கள் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டு வந்தோம். அந்தச் சட்டத்தில் பழங்குடியினர், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரது அனுமதி இல்லாமல் அவர்களது நிலத்தை எடுத்துக்கொள்ள முடியாது. அந்த நிலத்தின் சந்தை விலையைவிட 4 மடங்கு அதிகமான தொகையை நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். ஆனால், நரேந்திர மோடி அதை எதிர்த்தார்.

எங்களது கூட்டணி அரசு அமைந்த பிறகு, ஜார்க்கண்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். நான் பொய் சொல்ல மாட்டேன், சொல்வதைத்தான் செய்வேன். நீங்கள் ராஜஸ்தான், சண்டிகர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளைக் கேட்கலாம்" என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 30-ஆம் தேதியும், 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 7-ஆம் தேதியும் நடைபெற்ற நிலையில், இன்று 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 16-ஆம் தேதியும், 5-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 20-ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

அங்கு ஆளும் பாஜகவை வீழ்த்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com