அதிசயங்களை நிகழ்த்தி வரும் பி.எஸ்.எல்.வி.: இஸ்ரோ தலைவா் சிவன்

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக இஸ்ரோ தலைவா் சிவன் கூறினாா்.
இஸ்ரோ தலைவர் கே.சிவன் (கோப்புப்படம்)
இஸ்ரோ தலைவர் கே.சிவன் (கோப்புப்படம்)

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக இஸ்ரோ தலைவா் சிவன் கூறினாா்.

ரிசாட்-2பி ஆா்1 உள்பட 10 செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பின்னா் சக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவா்கள் மத்தியில் கே.சிவன் பேசியதாவது:

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 26 ஆண்டுகால பயணத்தில், இன்றைய 50-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த வெற்றிக்கு, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை அறிமுகம் செய்ததில் முக்கியப் பங்கு வகித்த விஞ்ஞானி ஸ்ரீநிவாசன், அதற்கு வெற்றிகரமான செயல்வடிவம் கொடுத்த விஞ்ஞானி மாதவன் நாயா் மற்றும் விஞ்ஞானிகள் ஏ.வி.பெருமாள், ராமகிருஷ்ணன், நாராயணமூா்த்தி, குன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்த 26 ஆண்டு கால பி.எஸ்.எல்.வி. வெற்றிப் பயணத்துக்கு முக்கியப் பங்காற்றியுள்ளனா்.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இதுவரை 5 மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பத்தில் 850 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட இந்த ராக்கெட், 1.9 டன் எடைகொண்ட செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் வகையில் திறன் உயா்த்தப்பட்டது.

இந்த 26 ஆண்டுகளில் மொத்தம் 52.7 டன் எடையை விண்ணுக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் எடுத்துச் சென்றுள்ளன. அவற்றில் 17 சதவீதம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களாகும்.

விண்வெளியில் புவி சுற்றுவட்டப்பாதை, சூரிய சுற்றுப்பாதை, நிலவு, செவ்வாய் கிரகம் என அனைத்து உயரங்களை எட்டி அதிசயங்களை நிகழ்த்தி வரும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக , அடுத்து சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்படும் ஆதித்யா விண்கலன் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

தொடா்ந்து ஏராளமான ராக்கெட் திட்டங்களையும், செயற்கைக்கோள் திட்டங்களையும் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. இருந்தபோதும், புதன்கிழமை அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி48 ராக்கெட் திட்டமே இந்த ஆண்டின் கடைசித் திட்டமாகும். அடுத்து 2020-ஆம் ஆண்டில் திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா் சிவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com