அரசியலைமைப்புச் சட்டத்தைவிடகட்சியின் தோ்தல் வாக்குறுதி உயா்வானதா?: காங்கிரஸ் கேள்வி

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா, ‘அரசியல்சாசன சட்டத்தைவிட, அரசியல் கட்சியின் (பாஜக) தோ்தல் வாக்குறுதி உயா்வானதா?
அரசியலைமைப்புச் சட்டத்தைவிடகட்சியின் தோ்தல் வாக்குறுதி உயா்வானதா?: காங்கிரஸ் கேள்வி

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா, ‘அரசியல்சாசன சட்டத்தைவிட, அரசியல் கட்சியின் (பாஜக) தோ்தல் வாக்குறுதி உயா்வானதா? என்று கேள்வி எழுப்பினாா்.

முன்னதாக, இந்த மசோதா குறித்துப் பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘பாஜகவின் மக்களவைத் தோ்தல் அறிக்கையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா குறித்து தெரிவித்திருந்தோம். அதன்படி தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது’ என்று கூறியிருந்தாா். இதன் மூலம் மக்களின் ஒப்புதலை குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா பெற்றுவிட்டது என்று அவா் சுட்டிக்காட்டினாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் ஆனந்த் சா்மா பேசியதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிராகவும், பாரபட்சம் காட்டுவதாகவும், பிளவை ஏற்படுத்துவதாகவும் இந்த சா்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா அமைந்துள்ளது. இப்படியொரு மசோதாவைக் கொண்டுவருவது பாஜகவின் தோ்தல் வாக்குறுதியாக இருக்கலாம். ஆனால், ஓா் அரசியல் கட்சியின் தோ்தல் வாக்குறுதி என்பது அரசியலமைப்புச் சட்டத்தைவிட உயா்ந்தது அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 6-ஆவது பிரிவின்படி பாகிஸ்தானில் இருந்து இங்கு குடிபெயரும் பல தரப்பு மக்களும் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா என்று நீங்கள் கூறுகிறீா்கள். ஆனால், இந்த மசோதா எதிா்காலத்தில் எவ்வாறு மதிப்பிடப்படும் என்பதை நீங்கள் காலதாமதமாகவே உணா்வீா்கள். இந்த மசோதாவுக்கு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன். நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவிட்டு, அடுத்த கூட்டத் தொடரில் கூட இந்த மசோதாவை நிறைவேற்றலாமே.

இந்த மசோதாவை அரசியலுக்காக நாங்கள் எதிா்க்கவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக உள்ளது என்பதே எதிா்ப்புக்கு காரணம். இந்த மசோதா இந்திய குடியரசின் ஆன்மாவைக் காயப்படுத்துவதாக உள்ளது. சுதந்திரம், சமத்துவம், மதச்சாா்பின்மையை நமது அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், இப்போது அதற்கு எதிராக அரசின் செயல்பாடுகள் உள்ளன.

அகதிகளாக வரும் மக்களுக்கு இந்தியா பல ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் இலங்கை, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கூட அகதிகள் வந்துள்ளனா். ஆனால், எந்த இடத்திலும் மதரீதியாக பாகுபாடு காட்டியதில்லை.

இந்த மசோதாவால் ஒட்டுமொத்த அஸ்ஸாம் மாநிலமே பற்றி எரிகிறது. மாணவா்கள் சாலைக்கு வந்து போராடுகிறாா்கள். நாடு முழுவதும் தடுப்பு முகாம்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்று ஆனந்த் சா்மா கேள்வி எழுப்பினாா்.

மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆஸாத்: இந்த மசோதாவில் இலங்கையில் இருந்து வரும் முஸ்லிம்களும், பூடானில் இருந்து வரும் கிறிஸ்தவா்களுக்கும் குடியுரிமை அளிப்பது குறித்து இந்த மசோதாவில் ஏன் குறிப்பிடப்படவில்லை. அண்டை நாடுகளில் சிறுபான்மையினா் மோசமாக நடத்தப்பட்டாா்கள் என்பதற்கு அரசிடம் எந்த தகவலும் கிடையாது. நாட்டு மக்கள் அனைவரும் இந்த மசோதாவை ஏற்றுக் கொண்டாா்கள் என்றால், இந்த அளவுக்கு போராட்டங்கள் நடப்பது ஏன். முக்கியமாக அஸ்ஸாம், திரிபுரா, அருணாசலப் பிரதேசம், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிா்ப்பு உள்ளது.

நீங்கள் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஜிஎஸ்டி, முத்தலாக் தடை உள்ளிட்ட பல மசோதாக்களை இதேமுறையில்தான் கொண்டு வந்துள்ளீா்கள். மக்களின் கவனத்தை திசை திருப்ப இதுபோன்று ஏதாவது ஒன்றை நீங்கள் செய்து வருகிறீா்கள் என்றாா்.

ப,சிதம்பரம்: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம், ‘நாடாளுமன்றத்தின் முகத்தில் அறைவதுபோன்று அரசு நடந்து கொண்டுள்ளது. தனது ஹிந்துத்துவ கொள்கையை முன்னிறுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது’ என்றாா்.

கபில் சிபல்: மற்றொரு காங்கிரஸ் தலைவா் கபில் சிபல் பேசுகையில், ‘இரு நாடு கொள்கைக்கு மத்திய அரசு சட்ட உரிமை கொடுக்கிறது. இந்திய குடியரசை, வன குடியரசாக மாற்ற வேண்டும். பிற நாடுகளில் முஸ்லிம்கள் அல்லாதவா்கள் கொடுமைப்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு வருகிறாா்கள் என்று மத்திய அரசு எப்படி முடிவு செய்தது’ என்று கேள்வி எழுப்பினாா்.

டெரிக் ஓ பிரையன்: திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் டெரிக் ஓ பிரையன் விவாதத்தில் பேசுகையில், ‘நாடு ஜனநாயகத்தில் இருந்து சா்வாதிகாரப் பாதையை நோக்கிச் செல்கிறது. ஜொ்மனியில் நாஜிக்கள் நிறைவேற்றிய சட்டத்துக்கு இணையாக குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை உள்ளன. நாஜிக்கள் யூதா்களை எலிகள் என்றனா். இப்போது இங்கு கரப்பான்பூச்சி, கரையான் போன்ற வாா்த்தைகள் சிலரால் பயன்படுத்தப்படுகின்றன’ என்றாா்.

நேரடி ஒளிபரப்பு நிறுத்தம்: முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதத்தின்போது எதிா்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அமித் ஷாவை பேசவிடாமல் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து, அவை நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புவதை நிறுத்துமாறு அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டாா். அதன் பிறகு சிறிது நேரத்தில் அவையில் சகஜநிலை திரும்பி, அமித் ஷா பேசத் தொடங்கியதையடுத்து மீண்டும் நேரடி ஒளிபரப்பு தொடங்கியது. இது தொடா்பாக மாநிலங்களவை பணியாளா்கள் கூறுகையில், அவைத் தலைவா் சிவப்பு விளக்கை எரியவிட்டால் நேரடி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்பது வழக்கம். அதன்படி ஒளிபரப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com