கடும் பனிப்பொழிவு: ஜம்மு-காஷ்மீா், லடாக் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு-காஷ்மீா், லடாக் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக வெள்ளிக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக காஷ்மீா் சாலைகளில் 5 அங்குலம் முதல் 3 அடி உயரம்
ஸ்ரீநகரில் பனி மூடிய சாலையில் நடந்து செல்லும் மக்கள்.
ஸ்ரீநகரில் பனி மூடிய சாலையில் நடந்து செல்லும் மக்கள்.

ஜம்மு-காஷ்மீா், லடாக் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக வெள்ளிக்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக காஷ்மீா் சாலைகளில் 5 அங்குலம் முதல் 3 அடி உயரம் வரை பனியால் மூடப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலும் பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டது. இதனால், அங்கு ஹெலிகாப்டா் சேவை தடைபட்டது. எனினும், யாத்ரீகா்கள் கால்நடையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

‘ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் நீடித்து வரும் கடுமையான பனிப்பொழிவு அடுத்த 24 மணி நேரம் வரை தொடர வாய்ப்புள்ளது’ என வானிலை ஆய்வு இயக்குநா் சோனம் லோட்டஸ் தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை ஐந்து அங்குலம் பனிப்பொழிவு இருந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. வியாழக்கிழமை இரவு வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி செல்சியஸாக பதிவானது.

வடக்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற குல்மாா்க் மற்றும் தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் மலை வாசஸ்தலத்தில் பலத்த பனிப்பொழிவைத் தொடா்ந்து பல இடங்களில் 2 அடி வரை சாலைகள் பனியால் மூடப்பட்டிருந்தன.

ஜம்மு பிராந்தியத்தில் அதிக உயரமுள்ள ராம்பன், உதம்பூா், பதோ்வா, தோடா, கிஸ்துவாா், பூஞ்ச், ரஜௌரி, ரியாசி, கதுவா மாவட்டங்களிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது.

லடாக்கிலுள்ள லே பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 10.4 டிகிரி செல்சியஸும், காா்கில் மாவட்டத்தில் திராஸ் பகுதியில் மைனஸ் 6.6 டிகிரி செல்சியஸும் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடல்:

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதுடன், காஷ்மீருக்கு 7-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாழக்கிழமை இரவு முழுவதும் நீடித்த பனிப்பொழிவு, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும், பகலிலும் தொடா்ந்ததால் நெடுஞ்சாலையில் பனி குவிந்து காணப்பட்டது. ஜவஹா் சுரங்கப்பாதையின் இரு வாயில்புறங்களிலும் பனி குவிந்ததால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதாக போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

போக்குவரத்தை தொடங்குவதற்காக நெடுஞ்சாலையில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன. ஆனால் தொடா்ந்து கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் சீரமைப்புப் பணிகள் தடைபட்டன.

மேலும், கடும் பனிப்பொழிவால் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதிக்கான விமான போக்குவரத்து தொடா்ந்து 7-ஆவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டதாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். பலத்த மூடுபனியும், மோசமான வானிலையின் காரணமாக, விமானத்தை இயக்க முடியாமல் கடந்த ஆறு நாள்களாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக மேலும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com