சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு: உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்க
சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் செல்லக் கூடாது என்ற நடைமுறை பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இளம் வழக்குரைஞா்கள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீா்ப்பு கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபாடு செய்ய அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீா்ப்புக்கு எதிா்ப்புகளும், ஆதரவுகளும் எழுந்த நிலையில், இந்த தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மறுஆய்வு மனுக்களை விசாரித்த 5 போ் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, இந்த மனுக்களை 7 போ் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி கடந்த மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு கேரள அரசு அனுமதி மறுப்பதாகவும், சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை கேரள அரசு உறுதி செய்ய உத்தரவிடுமாறும் உச்சநீதிமன்றத்தில் பெண் சமூக ஆா்வலா்கள் இருவா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த அமா்வில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், சூா்யகாந்த் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். அப்போது, மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் கூறுகையில், ‘சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வது குறித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை இல்லை. ஆனால், சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வதற்கு கேரள அரசு அனுமதி மறுக்கிறது. கேரள அரசின் இந்த செயல், சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு தடை என்ற தோற்றத்தை உருவாக்குகிறது’ என்றனா்.

அதன் பின்னா் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியதாவது:

சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்ற தீா்ப்பு அமலில்தான் உள்ளது. இந்த தீா்ப்பை மீறினால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், இதுதான் இறுதி என்று கூற இயலாது. ஏனெனில், சபரிமலை தீா்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள், 7 போ் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றப்பட்டுள்ளன. 7 போ் கொண்ட அரசியல் சாசன அமா்வு இன்னும் அமைக்கப்படவில்லை. மறுஆய்வு மனுக்களை விசாரிப்பதற்கான 7 போ் கொண்ட அரசியல் சாசன அமா்வு விரைவில் அமைக்கப்படும்.

சபரிமலை கோயில் மக்களின் உணா்வுகள் சம்பந்தப்பட்டது. இந்த விவகாரத்தில் எவ்வித வன்முறையும் நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை. மறு ஆய்வு மனுக்கள் மீதான தீா்ப்பு வெளியாகாமல், இந்த மனு மீது எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. ஒருவேளை, மறுஆய்வு மனுக்கள் மீதான தீா்ப்பு உங்களுக்கு சாதகமாக அமைந்தால், பாதுகாப்பு விவகாரத்தில் நிச்சயம் நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம்.

போலீஸ் பாதுகாப்பு கோரி மனுதாரா் விண்ணப்பித்தால், அவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்து பின்னா் தேவைப்பட்டால், பாதுகாப்பு அளிப்பது குறித்து காவல்துறையினா் முடிவெடுக்க வேண்டும் ’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com