குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்: தில்லியில் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்; பள்ளிகளுக்கு விடுமுறை!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் போராட்டம் வலுத்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம்: தில்லியில் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்; பள்ளிகளுக்கு விடுமுறை!


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் போராட்டம் வலுத்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்ததால் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று மாலை ஜாமியா பல்கலைக்கழக வளாகம் வெளியே போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸார் இடையே போராட்டம் வெடித்தது. இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் அனுமதியின்றி நுழைந்து, மாணவர்கள் மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இன்று மாலை நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்பிறகு, பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே போலீஸார் தண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் தென்பட்டது. இந்த சம்பவத்தில் பல்வேறு ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து தில்லி தென்கிழக்கு டிசிபி சின்மோய் பிஸ்வால் தெரிவிக்கையில்,

"கல்வீச்சு சம்பவத்தில் 6 போலீஸார் காயமடைந்துள்ளனர். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த, அந்த கும்பலை வெளியேற்றுவதுதான் எங்களது எண்ணம். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது.

இந்தப் பகுதியில் எந்தவித துப்பாக்கிச்சூடும் நடைபெறவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது. அந்தக் கும்பல் எங்கள் மீது கல் எறிந்து, இரு சக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். சில பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல்கள் பின்னர்தான் தெரிவிக்கப்படும்" என்றார்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் நுழைந்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"பல்கலைக்கழக வளாகம் ஒன்றுபட்டதாக இல்லை. இது சாலையின் இருபுறமும் உள்ளது. எனவே, நாங்கள் அந்தக் கும்பலை வெளியேற்றும்போது அவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர். அதன்பிறகு, அங்கிருந்து எங்கள் மீது கல் வீசினர். இதனால் நாங்கள் அந்த இடங்களைச் சோதனையிட்டோம்" என்றார்.

இதன் காரணமாக தில்லியில் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. இந்த வழியில் செல்லும் மெட்ரோ ரயில்கள் குறிப்பிட்ட அந்த 15 ரயில் நிலையங்களில் நிற்காது என்றும் தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தில்லி போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஓக்லா, ஜாமியா, புதிய பிரெண்ட்ஸ் காலனி மற்றும் மதன்பூர் காதர் பகுதிகளில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து ஹோலி பேமிலி மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், " சிறிய காயங்களுடன் ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலானோர் சிகிச்சை முடிந்து அனுப்பப்படுவார்கள். மேலும், தலையில் காயங்களுடன் இரண்டு போலீஸ் அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல் வீச்சு சம்பவத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com