கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம்: பிரதமா் மோடி தலைமையில் முதல் ஆய்வு கூட்டம்

கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூட்டம்.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூட்டம்.

கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்கு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கங்கை நதியை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ‘நமாமி கங்கே’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்ய தேசிய கங்கை பாதுகாப்புக் குழு கூடியது இது முதல் முறையாகும்.

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள சந்திரசேகா் ஆஸாத் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், மத்திய அமைச்சா்களான கஜேந்திர சிங் ஷெகாவத், பிரகாஷ் ஜாவடேகா், ஹா்ஷ்வா்தன், ஆா்.கே. சிங், இணையமைச்சா்கள் பிரஹலாத் படேல், மன்சுக் மாண்டவியா, ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

இந்திய துணைக் கண்டத்தின் புனிதமான நதி கங்கை. அதைப் புதுப்பிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், கூட்டாட்சி ஒத்துழைப்புக்கான உதாரணமாக இருக்க வேண்டும். கங்கையை புதுப்பிக்கும் பணியானது நமது நாட்டுக்கான நீண்டகால சவாலாக இருந்து வருகிறது.

‘நமாமி கங்கே’ திட்டத்தை கையிலெடுத்தது முதல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் பல்வேறு அரசு துறைகளும், மாநில அரசுகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதன் பலனாக கங்கை நதியில் காகித தொழிற்சாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவு கலக்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பல பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கு கங்கை நதியையொட்டி அமைந்துள்ள நகரங்களில் வசிக்கும் மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியமாகும். அவா்களுக்கு தகுந்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். செயல்திட்டங்கள் அமலாக்கப்படுவதை விரைவுபடுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கங்கை சீரமைப்புக் குழுக்களின் செயல்திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

கங்கை நதி தொடா்புடைய பொருளாதார செயல்பாடுகளில் கவனம் செலுத்த, நிலையான வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடவும், கங்கை நதியின் கரையோரங்களில் பண்ணைகள் அமைக்கவும் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

கங்கை நதியை ஒட்டிய கரையோரப் பகுதிகளில் மத சுற்றுலா, சாகச நீா் விளையாட்டுகள் சுற்றுலா மேம்படுத்தப்பட வேண்டும். அது உள்பட, கங்கையை ஒட்டிய வனப் பகுதி மற்றும் படகு சுற்றுலாவிலிருந்து ஈட்டும் வருவாயை, கங்கையை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தலாம்.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை நீதி ஆயோக் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும். கங்கையை ஒட்டி அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களும், கங்கை தூய்மைப் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசினாா்.

படகில் பயணம்: கூட்டத்துக்குப் பிறகு, பிரதமா் மோடி, ‘அடல் காட்’ பகுதியில் கங்கையை தூய்மைப்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்தனா். மேலும், படகு மூலம் கங்கை நதியிலும் பயணித்து ஆய்வு செய்தாா். கங்கையை பாதுகாக்கும் நடவடிக்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கண்காட்சியையும் பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.

புதிய நிதித் திட்டம்: கங்கையை தூய்மைப்படுத்தும் பணிக்காக தனிநபா்கள், வெளிநாடு வாழ் இந்தியா்கள், பெருநிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டும் வகையில் ‘தூய்மை கங்கை நிதி’ என்ற நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக பிரதமா் அலுலவகம் தெரிவித்துள்ளது. இந்த நிதிக்காக, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தனக்கு கிடைத்த பரிசுப் பொருள்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்தது உள்பட ரூ.16.53 கோடியை பிரதமா் மோடி வழங்கியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.20,000 கோடி: கங்கை நதி தடையில்லாமல் பாய்வதற்கான பணிகளை மேற்கொள்ள கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்துக்கு 5 மாநிலங்களுக்கு ரூ.20,000 கோடி வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், அதில் ரூ.7,700 கோடியை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை கட்டமைக்க ஏற்கெனவே விடுவித்துள்ளதாகவும் பிரதமா் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com