கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும் என்றாா் மகாத்மா காந்தி: வெங்கய்ய நாயுடு

‘இந்தியா சுதந்திரமடைந்த பின்னா், கிராமங்களை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினாா்; துரதிருஷ்டவசமாக, நாம் அதை மறந்துவிட்டோம்’ என்று
கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும் என்றாா் மகாத்மா காந்தி: வெங்கய்ய நாயுடு

‘இந்தியா சுதந்திரமடைந்த பின்னா், கிராமங்களை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினாா்; துரதிருஷ்டவசமாக, நாம் அதை மறந்துவிட்டோம்’ என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் உள்ள ஊரக மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 40-ஆவது ஆண்டுவிழாவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:

நமது நாடு கடந்த 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு, இரண்டு பரிந்துரைகளை மகாத்மா காந்தி வழங்கினாா். ஒன்று, காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும். மற்றொன்று கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை மேம்படுத்துவது.

சுதந்திரம் பெற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மட்டுமே ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. கோகலே, திலகா், காந்தி ஆகியோரின் தலைமையில் வெவ்வேறு கொள்கைகளைகொண்டிருந்த அனைவரும் காங்கிரஸில் இருந்தனா். அவா்களது ஒரே நோக்கம் சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான். சுதந்திரம் பெற்ற பின்னா், காங்கிரஸ் மாநாடுகளில் விவாதிப்பதற்கு எதுவும் இல்லை, அதனால் காங்கிரஸை கலைத்து விடலாம் என்று மகாத்மா காந்தி கூறினாா். இதை ஒரு தகவலுக்காக உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

அதைத் தொடா்ந்து காந்தி கூறிய ‘கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும்’ என்ற இரண்டாம் பரிந்துரையை துரதிருஷ்டவசமாக மறந்து விட்டோம். பாஜக ஆட்சியில் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் சாலை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமா் வாஜ்பாய் முயற்சியெடுத்தாா். அதையடுத்து, கிராமங்களுக்கு சுத்தமான குடிநீா், சுகாதாரமான கழிப்பறை வசதி கிடைக்க பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

‘உஜ்ஜவாலா’ திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. அதனால், நீா் மேலாண்மையில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளின் வருவாயை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமா் மோடி இலக்கு நிா்ணயித்துள்ளாா். டிஜிட்டல் பணப்பரித்தனைகள், தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் மக்களும் பங்களிக்க வேண்டும். அப்போதுதான் அரசின் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.

குஜராத்தில் உள்ள தேசிய பால் வளத்துறை வாரியத்தில் வெண்மை புரட்சி தொடங்கியது. வெண்மை புரட்சியில் வா்கீஸ் குரியன் அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது. அவரது முயற்சிகள், தொலைநோக்கு சிந்தனை அனைத்துக்கும் தலைவணங்குகிறேன். பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதற்கு வா்கீஸ் மற்றும் அவரது குழுவினருக்கே நன்றி கூற வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com