"குடியுரிமை சட்டம்: 2021 அஸ்ஸாம் தேர்தலில் பாஜகவுக்கு ஆதாயம்'

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், "மாநிலத்தில் 2021-இல் நடைபெறவுள்ள

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், "மாநிலத்தில் 2021-இல் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் இந்த சட்டத்தால் பாஜகவுக்கு ஆதாயம் கிடைக்கும்' என்று பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்தார்.
 "2016 சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியிருப்பவர்களை அடையாளம் காண்பதற்கான பணிகளை முன்னெடுத்தது. இதற்காக அஸ்ஸாம் குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பாஜகவுக்கு ஆதாயம்தான் கிடைக்கும்' என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறுகையில், "குடியுரிமை சட்டம் சிறந்த சட்டமாகும். தற்போதைய பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும். அஸ்ஸாமில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸும், அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை பாஜக தற்போது நிறைவேற்றி வருகிறது' என்றார்.
 தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் குடியுரிமை சட்டத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறினார்.
 கடந்த 2014-ஆம் ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத இதர சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகுக்கும் குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 நிரந்தர குடியுரிமை பெறுபவர்களால் அஸ்ஸாமிலும், மேற்குவங்கத்திலும் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் தாக்கம் ஏற்படும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
 அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு 2021-ஆம் ஆண்டு ஏப்ரல்-மே காலகட்டத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 அஸ்ஸாம் முதல்வர் சோனோவால் விளக்கம்: "குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே குடியுரிமை பெற வாய்ப்புள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் நிரந்தரக் குடியுரிமை பெறப் போகிறார்கள் என்று வெளியாகும் தகவலில் உண்மையில்லை.
 இதுபோன்ற தவறான தகவல்கள் தான் வன்முறைக்கு காரணமாக இருக்கிறது. அமைதியான வழியில் போராடினால் பிரச்னையில்லை. பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் எச்சரித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com