குடியுரிமை சட்டம்: வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் போராட்டம்

​குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் சனிக்கிழமையும் போராட்டம் நீடித்தது.
குடியுரிமை சட்டம்: வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் போராட்டம்

மேற்கு வங்கத்தில் ரயில் நிலையத்துக்கு தீவைப்பு; அஸ்ஸாமில் ஒருவர் பலி
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கத்திலும் சனிக்கிழமையும் போராட்டம் நீடித்தது.
 மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறின. அஸ்ஸாமில் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
 குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகாலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை 6 மணி நேரம் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
 மேற்குவங்கத்தில் ரயில் நிலையத்துக்கு தீ வைப்பு: இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவரும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமையும் போராட்டம் நீடித்தது.
 முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் முர்ஷிதாபாத் நகரில் பேருந்துகள், ரயில் நிலையம், சுங்கச் சாவடி ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது.
 ஹெளரா மாவட்டத்தின் சங்ரயில் நகரில் உள்ள ரயில் நிலையத்தின் ஒரு பகுதிக்கு மர்ம கும்பல் சனிக்கிழமை தீவைத்தது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களையும் அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கியது. சில கடைகளுக்கும் மர்ம கும்பல் தீ வைத்தது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். கிருஷ்ணாபூர் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் இல்லாத ரயில்களுக்கு மர்ம கும்பல் தீவைத்தது. சஜ்னிபாரா ரயில் நிலையத்தில் பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.
 ஹெளரா-புணே இடையே இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் உள்பட சில விரைவில் ரயில்கள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
 முதல்வர் மம்தா எச்சரிக்கை: அமைதியான வழியில் போராட்டத்தை நடத்துமாறும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்தார்.
 அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது. சாலை மறியல், ரயில் மறியலில் ஈடுபட வேண்டாம். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டமும், நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடும் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 அஸ்ஸாமில் மேலும் ஒருவர் பலி: அஸ்ஸாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டத்தில் தேகியாஜுலி பகுதியில் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீவைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, போராட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
 அஸ்ஸாமில் கடந்த சில தினங்களாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
 குவாஹாட்டி, திப்ரூகர் ஆகிய நகரங்களில் போராட்டம் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு சில மணி நேரங்களுக்கு சனிக்கிழமை தளர்த்தப்பட்டது. எனினும், குவாஹாட்டி நகரில் பள்ளிகள், அலுவலகங்கள் ஆகியவை மூடப்பட்டிருந்தன.
 இணைய சேவைக்கான தடை காலம் நீட்டிப்பு: அஸ்ஸாம் மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் சஞ்சய் கிருஷ்ணா கூறுகையில், "மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை வரை இணையச் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்குக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதற்காக சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, இணையச் சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.
 போராட்டத்தை முன்னெடுத்துவரும் அஸ்ஸாம் மாணவர் சங்கத்துடன் இணைந்து போராட்டம் நடத்திவரும் ஏஜேஒய்சிபி அமைப்பு குவாஹாட்டி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது.
 இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது என்று ரயில்வே நிர்வாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
 அஸ்ஸாம் மாணவர் சங்க பொதுச் செயலர் லுரிஞ்ஜோதி கோகோய் கூறுகையில், "தினமும் மாலை 5 மணி வரை போராட்டம் நடத்துவோம். மகாத்மா காந்தி கடைப்பிடித்த அஹிம்சை வழியை பின்பற்றி வருகிறோம்' என்றார்.
 85 பேர் கைது: "அஸ்ஸாமில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது' என்று அந்த மாநில காவல் துறைத் தலைவர் பாஸ்கர் ஜோதி மகந்தா தெரிவித்தார்.
 நாகாலந்தில் முழு அடைப்பு: நாகாலாந்தில் பள்ளிகள், கல்லூரிகள் சனிக்கிழமை மூடப்பட்டிருந்தன. குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டுமே சாலையில் காண முடிந்தது. 6 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது என்று அந்த மாநில அதிகாரிகள் கூறினர்.
 போராட்டத்துக்கு ஆர்ஜேடி அழைப்பு: குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 21-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட பிகாரில் எதிர்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சனிக்கிழமை அழைப்பு விடுத்தது.
 பின்னணி: பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத இதர சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகுக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
 இந்த சட்டமானது, அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ள அஸ்ஸாம், மேகாலயம், மிஸோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் பழங்குடியின பகுதிகளுக்கும், "உள் நுழைவு அனுமதி' நடைமுறை அமலில் உள்ள பகுதிகளுக்கும் பொருந்தாது. எனினும், இந்த சட்டத்துக்கு எதிராக, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com