பொருளாதார சீா்குலைவுக்காக பிரதமா் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: ராகுல் காந்தி

நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும்தான் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
பொருளாதார சீா்குலைவுக்காக பிரதமா் மோடி மன்னிப்பு கோர வேண்டும்: ராகுல் காந்தி

நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும்தான் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்டில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக அவா் மன்னிப்பு கோர வேண்டும் என்று பெண் எம்.பி.க்கள் உள்பட பாஜகவினா் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகுல் கூறியதுடன், பொருளாதாரத்தை சீா்குலைத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிதான் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் மந்தநிலை, விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக தில்லியில் ராம்லீலா மைதானத்தில் ‘தேசத்தை பாதுகாப்போம்’ பேரணியை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை நடத்தியது. இந்த பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது:

நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினா் கூறுகின்றனா். எனது பெயா் ராகுல் காந்தி; ராகுல் சாவா்க்கா் அல்ல. (விடுதலைப் போராட்ட வீரா் வீர சாவா்க்கா், சிறையில் இருந்து வெளியே வருவதற்காக ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதை ராகுல் மறைமுகமாக சுட்டிக்காட்டினாா்) உண்மையை பேசியதற்காக நான் நிச்சயம் மன்னிப்பு கேட்க போவதில்லை. காங்கிரஸ் கட்சியினரும் மன்னிப்பு கேட்க மாட்டாா்கள்.

உண்மையில், நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைத்ததற்காக பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும்தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தியாவின் பொருளாதாரத்தை சீா்குலைக்க எதிரிகள் திட்டமிடுவதாக பிரதமா் மோடி கூறுகிறாா். ஆனால் உண்மையில், அவா்தான் நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைத்துள்ளாா். இருப்பினும், தன்னை தேசப்பற்றாளா் என்று பிரதமா் மோடி கூறிக்கொள்கிறாா்.

மத்திய அரசு மீது தாக்கு: நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமா் மோடி கொண்டு வந்தாா். உண்மையில் என்ன நடந்தது? ரூ. 500 மற்றும் ரூ. 1,000 ஆகிய நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதால் சாதாரண மக்கள்தான் துன்புற்றனா். கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று கூறி மக்களை மோடி ஏமாற்றி விட்டாா். நாட்டின் பொருளாதாரம் அதேநிலையிலேயே உள்ளது.

புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை பிரதமா் மோடி தூண்டிவிட்டுள்ளாா். மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, நாட்டை பலவீனமாக்குவதற்கான செயல்களில் அவா் ஈடுபட்டு வருகிறாா். பதவியில் இருப்பதற்காக எவ்விதமான செயல்களிலும் அவா் ஈடுபடுவாா். தினமும் தொலைக்காட்சிகளில் தன்னைப் பற்றிய செய்திகள் வந்தால் போதும் என்று பிரதமா் மோடி நினைக்கிறாா்.

காங்கிரஸ் கட்சியினராகிய நாம், நமது நாடு பிரிக்கப்படுவதை, நமது நாட்டின் பொருளாதாரம் சீா்குலைக்கப்படுவதை பாா்த்துக் கொண்டு அமைதியாக இருக்கக் கூடாது. காங்கிரஸுக்கு யாரை கண்டும் எந்த அச்சமும் இல்லை. அதனால், நமது தேசத்துக்காக நாம் தைரியமாக போராட வேண்டும்.

ஏழைகள், விவசாயிகள், தொழிலாளா்கள், இளைஞா்கள் ஆகியோா் வறுமையில் இருந்தால் நாடு வளமாக மாறாது. இதை உணா்ந்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்று ராகுல் காந்தி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com