அச்சப்பட வேண்டியதா, சூரிய கிரகணம்? - அறிவியல் உண்மை என்ன?

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன? 
அச்சப்பட வேண்டியதா, சூரிய கிரகணம்? - அறிவியல் உண்மை என்ன?

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன? 

வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 26) காலை 9 மணி முதல் மதியம் 12.29 மணி வரை நிகழ இருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நாம் இதைப் பார்க்கலாம்.

மக்களிடையே சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சாப்பிடலாமா, வெளியே வரலாமா, குளிக்க வேண்டுமா, கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவார்களா... என நிறைய கேள்விகள், அச்சங்கள்.

இவை ஒருபுறம் என்றால் சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாகக் கண்டுகளிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மிகவும் பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை காண்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சூரிய கிரகணம் குறித்த பல்வேறு அறிவியல் பூர்வமான தகவல்களைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம் என்பது என்ன? 

சூரிய கிரகணம் என்பது வானத்து சந்திரனின் நிழல் விளையாட்டுதான். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் வரும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக (Ring of fire) தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். சூரியன் சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம். இப்போது டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ளது  வளைய சூரிய கிரகணம்.

சூரிய கிரகணத்தை எங்கு காணலாம்?

வளைய சூரியகிரகணம் தமிழகத்தில், உதகை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் ஈரோடு என 9 மாவட்டங்களில், சூரியன் பொன் வளையமாகத் தெரியும். மற்ற மாவட்டங்களில் மற்றும் இந்தியா முழுமைக்கும் சூரியன் பகுதி கிரகணமாகத் தெரியும்.  

வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் செகாவத்து என்ற ஊரில் துவங்கி, உதகையில் நுழைகிறது. சூரிய கிரகணம் டிசம்பர் 26ம் நாள், காலை 8.07 மணிக்குத் துவங்கி, காலை 11.14 க்கு முடிகிறது. (சுமார் 3 மணி7 நிமிடம்) ஆனால், சூரியன் நெருப்பு வளையமாக ( Ring of fire) தெரியும் நேரம் காலை 9.31க்கு துவங்கி 9.34 வரை சூரியனின் வளையம் நீடிக்கிறது.

2019, டிசம்பர்26 வளைய கிரகணப் பாதையின் அகலம்: 118 கி.மீ, நீளம்: 12,900 கி.மீ, வளைய சூரிய கிரகண பாதை சவூதியில் துவங்கி, வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள காம் (Gaum) வரை பயணிக்கிறது.


சந்திரன் எப்படி பெரிய சூரியனை மறைக்கிறது?

சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. அதுபோலவே, சந்திரனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தைப் போல சூரியனுக்கு உள்ள தூரம் 400 மடங்கு அதிகம். எனவே, பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன், சூரியன் இரண்டும் ஒரே அளவில் தெரிகிறது. எனவே, சந்திரனின் நிழல் சூரியனை மறைத்து சூரிய கிரகணத்தை  உருவாக்குகிறது.

கிரகணத்தின்போது சூரியன் வளையமாகத் தெரிகிறது? ஏன்?

சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. அப்போது சில சமயம் அருகிலும், சில சமயம் தொலைவிலும் இருக்கும். முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் அருகில்/அண்மையில் இருக்கும்போது  ஏற்படும். வளைய கிரகணம் என்பது சந்திரன் தூரத்தில்/சேய்மையில்  இருக்கும்போது, சந்திரனின் நிழல் சூரியனுக்குள்ளேயே விழும். சூரியனை முழுமையாக மறைக்காது. சூரியன் எட்டிப்பார்த்துக்கொண்டு வெளியே இருக்கும். இதனையே வளைய சூரிய கிரகணம் என்று சொல்கிறோம்.

சூரிய கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்கலாமா?

சூரிய கிரகணத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியனைப் பார்ப்பதற்கு சிறப்பான ஒரு சூரிய கண்ணாடி தயாரித்துள்ளனர். அதனைபோட்டுக்கொண்டு சூரியனைப் பார்த்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சூரியனைப் பார்க்கும்போது கண்ணுக்கு எப்போதும் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பான சூரிய வடிகட்டி கண்ணாடி(solar filer) குறைந்த விலையில் லட்சக்கணக்கில் வினியோகித்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பெசன்ட்நகர் கடற்கரையில் தேநீர் விருந்துடன் காலை 8 மணி முதல் 11.30 வரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் போது சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்புகள் குறையும்.


சூரிய கிரகணத்தின் தாக்கத்தினால் தோஷம் ஏற்படக்கூடிய ராசிக்காரர்கள்:

கேட்டை, மூலம், பூராடம், மகம், அஸ்வினி இந்த ஐந்து ராசிக்காரர்களும் கிரகணத்தன்று பரிகாரம் செய்யவேண்டிய ராசிகளாகும்.

இந்த சூரிய கிரகணம் நிகழ்வதற்கு முன்னாள் ஒரு முறை குளித்து விடுங்கள். சூரிய கிரகணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது. சமைத்த பொருட்களை மூடி வைக்க வேண்டும். வெளியில் செல்லாமல் இருப்பது நலம் தரும். சூரிய கிரகண சமயத்தில் எந்த வேலையும் செய்யாமல் இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவது எந்த அளவிற்கு சிறப்பான பலனை பெற்றுத்தரும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கிரகண நேரத்தில் உச்சரிக்கப்படும் மந்திரம் சாதாரண நேரங்களில் நீங்கள் உச்சரிப்பதை விட லட்சம் மடங்கு பலன் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால்தான் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் அவசியமான ஒன்றாக கூறப்படுகிறது. 

கிரக சேர்க்கையினால் ஏற்படும் தீமைகள்

இந்த கிரக சேர்க்கையினால் டிசம்பர் 25, 26, 27 அன்று பிறக்கும் குழந்தைகளின் உடல்நலனில் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் அந்தப் பெற்றோர்கள் அதற்குரிய சரியான பரிகாரங்களை செய்வது அவர்களது குடும்பத்திற்கு நல்லது. குரு - சனி இருவரின் சேர்க்கை இருப்பதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். அதனால் நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாது இருப்பவர்களுக்கு பாதிப்புகள் உருவாகலாம். அதனால் அவர்கள் முறைப்படி தர்ப்பணம் செய்வது நற்பலன்களை நல்கும். 

அறிவியல் உண்மை என்ன?

சூரிய கிரகணத்தால் உலகில் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு ஏற்படுவது இல்லை. இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இவர்கள் குறிப்பிடும் 6  கிரகங்களில் சூரியன், சந்திரன் இரண்டும் கிரகங்கள் இல்லை. சூரியன் அறிவியல் ரீதியாக ஒரு விண்மீன். சந்திரன் பூமியின் துணைக்கோள். கேது என்ற கோளே, நம் சூரிய மண்டலத்தில் இல்லை. புராணத்தின் வழியே கூறப்படும் கற்பனை.

சூரிய கிரகணத்தின் முழுமையான நேரம் காலை 8.06 லிருந்து காலை 11.14 வரை மட்டுமே. இவர்கள் சொல்லுவது காலை 8 மணி முதல் மதியம் 1.15 வரை என்று. இதுவும் தவறு. மேலும் இவர்கள் குறிப்பிடும் மூல நட்சத்திரம் என்பது, விருச்சிக ராசி மண்டலத்தில் பூமியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. தனுசு ராசி 5000 ஒளியாண்டுகள் தொலைவில்  உள்ளது. சூரியனோ பூமியிலிருந்து 14.79 கோடி கி.மீ தூரத்தில்தான் உள்ளது. இதில் எப்படி சூரிய கிரகணத்தால் மூல நட்சத்திரம் மற்றும் தனுசு ராசி பிரச்னைக்குள்ளாகும்? 

சூரிய கிரகணத்தின்போது எந்தவொரு தீமை விளைவிக்கும் கதிர்களும் சூரியனிடமிருந்து வரவில்லை. அவை உணவை, உயிரினங்களைப் பாதிப்பதும் இல்லை. எனவே குளிக்க வேண்டியதும் இல்லை. உணவை மூடிவைக்க வேண்டியதும் இல்லை. வீட்டை/கோவிலை கழுவ வேண்டியதும் இல்லை. கிரகணத்துக்கு முன்னும் பின்னும் குளிக்க வேண்டியது இல்லை. கடலில் குளிக்க வேண்டியதோ, சாங்கியமாக நல்ல தண்ணீரில் உப்பைப் போட்டு குளிக்க வேண்டியதில்லை. அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். போலி அறிவியலுக்குள்  மூழ்கிவிடக்கூடாது. தாரளமாய் நீங்கள் கிரகணத்தின் போது சாப்பிடலாம். எந்த  பிரச்சினையும் ஏற்படாது.

கிரகணத்தின்போது கோவில் நடைதிறப்பு சரியா?

அறிவியல் ரீதியாக கோயில் நடைதிறப்பு மற்றும் பூஜை நேரத்தில் சூரிய கிரகணத்தின் தாக்கம் இருக்காது காலம் காலமாக பின்பற்றுவதால் அந்த நடைமுறைகள் இன்றும் தொடர்கிறது.

கிரகணத்தின் போது கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது! ஏன்?

கிரகணத்தின் போது கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது என்று ஏதும் இல்லை. தாராளமாக சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின்போது அம்மாவாகப் போகிற கர்ப்பிணிப் பெண்கள் வரலாம். எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது வெளியே வந்தால்,குழந்தை பிறந்த பின்னர், அது ஊனமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அது உண்மையில்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. தவறான கருத்து. கர்ப்பிணி பெண்கள் தாராளமாக சூரியகிரகணத்தின் போது வெளியே வரலாம். எதுவும் நிகழாது. சூரிய கிரகணத்தை பார்த்த பெண்கள் நல்ல முறையில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். 

சூரிய கிரகணத்தின்போது வீட்டிலுள்ள உணவு மற்றும் நீரில். தர்ப்பையை போடவேண்டும்! அது ஏன்? தர்ப்பை என்றால் என்ன?

தர்ப்பை என்பது ஒரு வகை கோரைப்புல். அது சூரியனிலிருந்து வரும் எந்தவித கதிரையும் / கிருமியையும் தடுக்க முடியாது. கிணறு, குளம், ஏரி மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளில் எத்தனை தர்ப்பை போட்டு அந்த நீரை காப்பாற்ற முடியும். மேலும், இது முழுக்க முழுக்க தவறான கருத்து. தர்ப்பை போடுவதால் எந்த பலனும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சூரியனிலிருந்து புதிதாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதிரும் சூரிய கிரகணத்தின்போது வருவது கிடையாது என்பது நிதர்சனமான அறிவியல் பூர்வமான உண்மை.

சூரிய கிரகணத்தின்போது உணவு உண்ணக்கூடாது, ஏன்? சூரியனிலிருந்து ஏதாவது சிறப்பு கதிர்கள் வருகின்றனவா?

எந்த ஓரு புதிய சூரிய கதிரும் வந்து பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அப்படி ஏதோ கதிர்கள்/அகச்சிவப்பு கதிர்கள் வந்து பூமியிலுள்ள உணவை பாதிப்படையச் செய்வதாக ஊடகங்கள் மற்றும் சோதிடர்கள் புரளியைக் கிளப்பி வடுகின்றனர். சூரிய கிரகணத்தின்போது பாதிப்பை  உருவாக்கும் கதிர்கள் சூரியனிலிருந்து வருவதில்லை. எப்போதும் வரும் கதிர்களே சூரிய கிரகணத்தின்போதும் வருகின்றன. அந்த அகச்சிவப்பு கதிர்கள் எப்போதும் வருபவை தான். சூரியனிடமிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்கள் தான் பூமியை, வளிமண்டலத்தை மற்றும் அதன் மேலுள்ள பொருட்களை சூடாக்குகிறது. அவை உணவை பாழாக்காது. எனவே நீங்கள் சூரிய கிரகணத்தின்போது தாரளமாக சாப்பிடலாம். உங்கள் நண்பர்களையும் சாப்பிடச்சொல்லலாம்.


கிரகணத்தின்போது நிகழ்ந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள்

கிரகணத்தின்போது நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் முக்கியமாக 3 கண்டுபிடிப்புகள் உலகத்திற்கு நன்மை பயப்பவை.

1. தனிம அட்டவணையின்  இரண்டாவது தனிமம், லேசான தனிமம் ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது 1868, ஆகஸ்ட் 18 அன்று நிகழந்த முழு சூரிய கிரகணத்தின் போதுதான் பண்டறிந்த வானவியலாளர் பியரீ ஜான்சென் (Pierre Janssen.). அதன் பின்னரே 1895ல் பூமியில் ஹீலியம் இருப்பது கண்டறியப்பட்டது.

2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்பியல் தத்துவம்( Relativity Theory of Light) நிரூபணம் செய்ய சான்று கிடைத்தது, 1919_ மே 19 இந்தியாவின் குண்டூரில் நிகழ்ந்த முழு சூரியகிரகணத்தின் போதுதான். கண்டறிந்தவர் ஆர்தர் எட்டிங்டன்(  Arthur Eddington)

3. சூரியனின் வெளிப்பகுதியான ஒளி மகுடத்தை(Corona) பார்க்கவே முடியாது. 1930ல் நிகழ்ந்த முழு சூரியகிரகணத்தின்போது,ஜெர்மன் வானவியலாளர்  வால்டர் க்ரோட்ரைன் (Walter Grotrian ), சூரிய கிரகணத்தின் போது சூரியனின் ஒளிவட்டம் மிகுந்த ஒளியுடன் தெரிந்ததையும், அதன் ஒளி மட்டுமல்ல, வெப்பமும் சூரிய பரப்பை விட அதிகமாக உள்ளதையும் கண்டறிந்தார். போட்டோஸ்பியர்(Photosphere) 5800 கெல்வின்.

இத்தனை அறிவியல் உண்மைகளையும் மனதில்கொண்டு, மிகத் துணிச்சலாக சூரிய கிரகணத்தை எதிர்கொள்ளலாம், தங்கள் பணிகளை வழக்கம்போல மேற்கொள்ளலாம் என்றும் அறிவியல் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com