தில்லியில் அடர் மூடுபனி: வெப்பநிலை 2.4 டிகிரியாக சரிவு!

தலைநகர் தில்லியில் சனிக்கிழமை குளிர் 2.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி உறை பனி அளவுக்கு வந்துள்ளது.
தில்லியில் அடர் மூடுபனி:  வெப்பநிலை 2.4 டிகிரியாக சரிவு!

தலைநகர் தில்லியில் சனிக்கிழமை குளிர் 2.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி உறை பனி அளவுக்கு வந்துள்ளது. மேலும், இது இந்தப் பருவத்தில் மிகவும் கடும் குளிர் நிலவிய தினமாகப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லி, தேசியத் தலைநகர் வலயம் (என்சிஆர்) பகுதிகளில் அடர் பனிமூட்டம் காரணப்பட்டதால், காண்பு திறன் குறைந்தது. இதனால், விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டன.

நகரில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக தில்லி சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இந்தப் பருவத்தில் மிகவும் குறைந்தபட்ச அளவாகும்.

இதேபோன்று குறைந்தபட்ச வெப்பநிலை பாலத்தில்  3.1 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 1.7 டிகிரி செல்சியஸ், ஆயா நகரில் 1.9 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடர் மூடு பனி காரணமாக பாலம் பகுதியில் காண்பு திறன் பூஜ்யம் அளவுக்கு வந்துள்ளது. இப்பகுதியில்தான்  தில்லி  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், தில்லியிலிருந்து 4 விமானங்கள் வேறு மார்க்கத்தில் திருப்பிவிடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, காண்பு திறன் குறைந்ததன் காரணமாக 24 ரயில்கள் 2 முதல் 5 மணி நேரம் வரை தாமதமாகச் சென்று கொண்டிருப்பதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஹௌரா - புதுதில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் 5 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது.

காற்றின் தரம்:

இந்நிலையில், தில்லியில் கடந்த 5 தினங்களாக மிகவும் மோசம் பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம், சனிக்கிழமை காலை 10 மணியளவில் 413 புள்ளிகளாகப் பதிவாகி 'கடுமையான' பிரிவில் இருந்தது. வெப்பநிலை குறைந்தது, காற்றில் ஈரப்பதத்தின் அளவு வெகுவாக அதிகரித்தது, காற்றின் வேகம் குறைந்தது உள்ளிட்டவை காரணமாக மாசுபடுத்திகள் குவிவதற்கு வாய்ப்பு உருவாகியதே காற்றின் தரம் குறைந்ததற்கு முக்கியக் காரணம் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு தில்லி சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2013, டிசம்பர் 30-இல் 2.4 டிகிரி செல்சியஸாகவும் 1996, டிசம்பர் 11-இல் 2.3 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியிருந்தது. வரலாற்றுச் சாதனை அளவாக குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் என 1930, டிசம்பர் 27-ஆம் தேதி பதிவாகியது என வானிலை ஆய்வு மையத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் குல்தீப் ஸ்ரீவத்ஸவா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com