மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.97,100 கோடியாக அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலமாக மாதந்தோறும் கிடைக்கும் சராசரி வருவாய் ரூ.97,100 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.97,100 கோடியாக அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலமாக மாதந்தோறும் கிடைக்கும் சராசரி வருவாய் ரூ.97,100 கோடியாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தபோது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதுதொடர்பாக கூறியதாவது:
ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தின் மூலமாக வரி ஆதாரங்கள் அதிகரித்துள்ளன; வருவாய் அதிகரித்துள்ளது; தொழில் நடைமுறைகள் எளிமையாகியுள்ளன.
தற்போதைய நிதியாண்டில் மாதாந்திர ஜிஎஸ்டி வரி வருவாய் சராசரியாக ரூ.97,100 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த சராசரி வருவாய் மாதம் ஒன்றுக்கு ரூ.89,700 கோடியாக இருந்தது.
வருமான வரி கணக்கு நடவடிக்கைகள் அனைத்தையும் இணையதளத்தில் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இணைய வழி ரசீது முறையும் அமலில் இருக்கிறது. இதனால்,  அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செலவுக் கணக்குகளில் வரி செலுத்துவோருக்கும், அரசுக்கும் இடையே உள்ள நேரடித்தொடர்பு குறைந்து வருகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பை அறிமுகம் செய்த பிறகு, மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து வேகமடைந்துள்ளது. நுழைவு வரி, சுங்கச்சாவடி, லாரிகள் வரிசை கட்டி நிற்பது போன்ற பிரச்னைகள் இல்லை. 
ஜிஎஸ்டி வரி விகிதம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால், நுகர்வோருக்கு ஆண்டுதோறும் ரூ.80,000 கோடி மொத்த பலன் கிடைத்து வருகிறது.  ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பெரும்பாலான பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அல்லது அந்த பொருள்கள் 5 சதவீத வரி வரம்பில் இருக்கின்றன.
வீடுகளுக்கான ஜிஎஸ்டி குறையும்: வீடு வாங்குபவருக்கு ஏற்படும் ஜிஎஸ்டி சுமையை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது. ஆகவே, இதுதொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை விரைவாக அளிப்பதற்காக அமைச்சரவைக் குழு ஒன்றை அமைக்குமாறு ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
தொழில்துறையினருக்கு சாதகமாக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளால் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சேவைதாரர்கள் பயனடைவர்.
ஜிஎஸ்டி வரி செலுத்துவோரில் 90 சதவீத தொழில்துறையினருக்கு காலாண்டு அடிப்படையில் வரி கணக்கு தாக்கல் செய்ய விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றார் கோயல்.

மொத்த இலக்கை எட்டவில்லை

நிகழ் நிதியாண்டில் ரூ.7.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், வரும் மார்ச் வரையிலான வசூல் தொகை ரூ.6.43 லட்சம் கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அடுத்த 2019-20 நிதியாண்டில் ரூ.7.61 லட்சம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான வரி குறைப்பு மற்றும் சலுகைகளை வழங்கியுள்ள போதிலும் வரி வருவாய் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். நிகழ் நிதியாண்டில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.13.48 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 (ஏப்ரல்-ஜனவரி) மாதங்களில் ரூ.9.71 லட்சம் கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், ஜிஎஸ்டி அமலுக்குப் பின் முதல் 5 ஆண்டுகளில் மாநிலங்களின் வருவாய் 14 சதவீதம் ஆண்டுதோறும் உயரும் என்று உறுதியளித்திருந்ததன்படி அதிகரித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com