பல்கலை பேராசிரியர் நியமனத்தில் புதிய இடஒதுக்கீடு முறை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விரைவில் மறுஆய்வு மனு

பல்கலைக்கழகங்களில் புதிய இடஒதுக்கீட்டு முறையில் பேராசிரியர்ள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் விரைவில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்திய


பல்கலைக்கழகங்களில் புதிய இடஒதுக்கீட்டு முறையில் பேராசிரியர்ள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் விரைவில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக பேராசிரியர் நியமனத்தில் புதிய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதற்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இடஒதுக்கீடு தொடர்பான இந்த தீர்ப்பை, உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தது. புதிய இடஒதுக்கீட்டு முறையின்படி (13 பாயிண்ட் முறை), ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தனித்தனி அலகாகக் கருதப்படும்; ஒவ்வொரு துறையிலும் தனித்தனியே இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். இதனால், பின்தங்கிய சில பிரிவினருக்கு  வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்பு, 200 பாயிண்ட் முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன்படி, ஒரு பல்கலைக்கழகம் ஒரு அலகாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இடஒதுக்கீடு பின்பற்றப்படும்.
இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, ராம்கோபால் யாதவ் (சமாஜவாதி), சதீஷ் சந்திர மிஸ்ரா(பகுஜன் சமாஜ் கட்சி), மனோஜ் குமார் ஜா(ராஷ்ட்ரீய ஜனதா தளம்), வினய் விஸ்வம்(இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
புதிய இடஒதுக்கீட்டு முறைப்படி, பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் ஒரு துறையில் 13 பணியிடங்கள் இருந்தால், 9 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 3 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 1 இடம் எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப்படும். ஆனால், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவருக்கு (எஸ்.டி.) வேலை கிடைக்காது. இந்த நிலை நீடித்தால்  இன்னும் 200 ஆண்டுகளானாலும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் வேலையில் சேர முடியாது.
அண்மையில், 706 பணியிடங்களுக்கு 13 பல்கலைக்கழகங்கள் அறிவிக்கை வெளியிட்டன. அவற்றில், 640 பணியிடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 57 ஓபிசி பிரிவினருக்கும், 18 எஸ்.சி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ்.டி. சமூகத்தினருக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.
ஒரு துறையில் 7 பணியிடங்களுக்கும் குறைவாக இருந்தால், அடுத்த 20 ஆண்டுகளில் எஸ்.டி. சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட வேலை கிடைக்காது. இந்த நிலை நீடித்தால், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு முறைக்கு அர்த்தமில்லாமல் போகும்.
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது வாதத்தை சரியாக எடுத்து வைக்கவில்லை. எனவே, முந்தைய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றும் வகையில், புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 48 மணி நேரத்தில் மத்திய அரசால் சட்டமாக்க முடிந்தது. ஆனால், நாட்டின் 85 சதவீத மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பது ஏன்?
அண்மையில் ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. மற்ற வகுப்பினருக்கான இடங்கள் குறைக்கப்பட்டிருந்தன. எஸ்.டி.பிரிவினர் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசின் தற்போதைய நடவடிக்கையின் மூலம், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அரசு படிப்படியாகக் குறைக்க இருப்பதாகத் தெரிகிறது. எனவே, சமூக நீதிக் கொள்கையை அரசு நிலைநாட்ட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.
இடஒதுக்கீடு முறை தொடரும்: அதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளித்துப் பேசியதாவது:
இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. துறை ரீதியான இடஒதுக்கீட்டு முறையை அரசு கொண்டு வரவில்லை; நீதிமன்றம்தான் அதுதொடர்பான உத்தரவை பிறப்பித்தது. நீதிமன்றத்தின் உத்தரவில் அரசுக்கு உடன்பாடில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று அவர் 
பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com