வாய்மையே வெல்லும்: வதேரா பேச்சு

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினரின் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, "வாய்மையே வெல்லும் என்பதால்
வாய்மையே வெல்லும்: வதேரா பேச்சு

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினரின் தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, "வாய்மையே வெல்லும் என்பதால் இந்த வழக்கிலிருந்து விடுபடுவேன்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இந்த இக்கட்டான நேரத்தில் நாடு முழுவதிலும் இருந்து எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இப்போது நலமாக உள்ளேன். என் மீது திணிக்கப்படும் எந்தச் சூழலையும் எதிர்கொள்வதற்குத் தேவையான பக்குவமான மனநிலையுடன் இருக்கிறேன்.
வாய்மையே எப்போதும் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தனது சுட்டுரைப் பதிவில் ராபர்ட் வதேரா குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலரும், அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியினுடைய சகோதரியுமான பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கத்திலுள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் வீடு வாங்கியதாக அவர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக, தில்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா கடந்த வியாழக்கிழமை தொடங்கி, தொடர்ந்து 3 நாள்கள் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவரிடம் வியாழக்கிழமை ஐந்தரை மணி நேரமும், வெள்ளிக்கிழமை 9 மணி நேரமும் விசாரணை நடைபெற்றது; சனிக்கிழமை 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதுதவிர, மற்றொரு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா வரும் செவ்வாய்க்கிழமை ஆஜராகி விசாரணைகளுக்கு பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வழக்கில் அமலாக்கத் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி ராபர்ட் வதேராவுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.































 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com