அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கு எதிராக தேசத் துரோக வழக்குப்பதிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கு எதிராக அந்த மாநில போலீஸாரால் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேருக்கு எதிராக அந்த மாநில போலீஸாரால் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மஜ்லீஸ் இ கட்சித் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைஸிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, ஒவைஸியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாஜக இளைஞரணியைச் சேர்ந்த மாணவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகவும், வாகனம் ஒன்றை தீவைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், ஒவைஸியின் வருகை குறித்து செய்தி சேகரிக்க வந்த தொலைக்காட்சி ஊழியர்களையும் அவர்கள் அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் பாஜக இளைஞரணியினர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், தொலைக்காட்சி ஊழியர்கள் ஆகியோர் சார்பில், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர் மீது தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டன. அதில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர் பாகிஸ்தானை ஆதரித்து கோஷங்களை எழுப்பியதாகவும், தங்களை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த 14 பேர் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 124-ஏ (தேசத் துரோகம்), 307 (கொலை முயற்சி) மற்றும் 8 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 14 மாணவர்களில், பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் சல்மான் இம்தியாஸ், துணைத் தலைவர் அமீர் ஆகியோரும் அடங்குவர்.
இதுகுறித்து தகவலறிந்த அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தினரும், பாஜக இளைஞரணியினர், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், தொலைக்காட்சி ஊழியர்கள் ஆகியோர் மீது பதிலுக்கு புகார் கொடுத்தனர். இதன்மீது ஆய்வு நடத்தி வருவதாகவும், அதன்பிறகு வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com