வாழ்க்கையைத் தொடங்குவதற்குள் முடிந்து போனதே: கணவரைக் கொன்றதால் என்ன கிடைத்தது? இளம் மனைவியின் கதறல்

கடுமையான நடவடிக்கை எடுத்து, பயங்கரவாதிகளைத் தண்டித்து, தனது கணவரின் ஆத்மா சாந்தியடைய மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த எச். குருவின் மனைவி கலாவதி (22) கூறியுள்ளார்.
வாழ்க்கையைத் தொடங்குவதற்குள் முடிந்து போனதே: கணவரைக் கொன்றதால் என்ன கிடைத்தது? இளம் மனைவியின் கதறல்


மாண்டியா: கடுமையான நடவடிக்கை எடுத்து, பயங்கரவாதிகளைத் தண்டித்து, தனது கணவரின் ஆத்மா சாந்தியடைய மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த எச். குருவின் மனைவி கலாவதி (22) கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த குரு, புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களில் ஒருவர்.

சம்பவம் குறித்து செய்தி அறிந்ததும், மாவட்ட அதிகாரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் குருவின் வீட்டுக்கு வந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.

வருவோர் அனைவரிடமும் கலாவதி கேட்கும் ஒரே கேள்வி இதுதான், நாட்டுக்காக சேவையாற்றும் எனது கணவரைக் கொன்றிருப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு கிடைத்தது என்ன? என்பதே. இந்த சம்பவத்துக்குக் காரணமான பயங்கரவாதிகளை கடுமையாக தண்டிப்பதன் மூலம், அவரது ஆத்மா சாந்தியடையும்  என்று கூறி கதறி அழுகிறார்.

குரு - கலாவதிக்கு 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. புது வாழ்க்கையை பல கனவுகளோடு தொடங்கிய தம்பதியின் வாழ்க்கை அதற்குள் முடிந்தே போய்விட்டது.

தனது கணவர் சென்ற வாகனம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகியது குறித்து செய்திகள் வந்ததும், அதனை நம்ப மறுத்த கலாவதி, தனது இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் விளக்கேற்றி தனது கணவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

ஆனால், வெள்ளிக்கிழமை வீர மரணம் அடைந்தவர்களின் பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட போது, ஒட்டுமொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com