காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படவில்லையெனில்.. எச்சரிக்கிறார் பயங்கரவாதியின் தந்தை

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது.
காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படவில்லையெனில்.. எச்சரிக்கிறார் பயங்கரவாதியின் தந்தை


ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது.

தனது வீர மகன்களை பயங்கரவாதத் தாக்குதலுக்கு தியாகம் செய்து விட்டு கதறிக் கலங்கி நிற்கிறது இந்திய பூமி.

இந்த நிலையில் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 49 சிஆர்பிஎஃப் வீரர்களின் மரணத்துக்குக் காரணமான பயங்கரவாதியின் பெற்றோர் எந்தவிதமான மனநிலையில் இருக்கிறார்கள்.

இத்தனை துயருக்கும் காரணமான பயங்கரவாதி அடில் அகமது தாரின் பெற்றோர் வசிக்கும் வீடு, தாக்குதல் நடந்த பகுதிக்கு 5 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. 

அடிலின் தந்தை குலாம் ஹசனை எக்ஸ்பிரஸ் குழுவினர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர் கூறியதாவது, எனது மகன் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்திருப்பது கவலையடைச் செய்துள்ளது. அது பயங்கரவாதியாக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும் இல்லை படை வீரர்களாக இருந்தாலும், விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 250 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறுகிறார். 19 வயதே ஆன பயங்கரவாதியான அடில் அகமது தாரின் தகப்பனாக இருந்தது அவரது பேச்சு.

ககபோரா பகுதியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர் குழுவை சந்தித்த ஹசன், தனது மகன் நடத்திய தற்கொலைத்  தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் குடும்பம் இருக்கும், எனது மகனுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. எனது மகன் இறந்ததால் நான் கவலை அடைந்துள்ளேன். எனது எதிர்காலம் அவனை நம்பியே இருந்தது. இதைப் போலவே பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினரும் இருந்திருப்பர். அவர்களது இழப்பால், அவரது குடும்பத்தினர் கடும் துயரத்தை அடைந்திருப்பர் என்று தனது பயங்கரவாதி மகனையும், பாதுகாப்புப் படை வீரர்களையும் ஒப்பிட்டு கண்டனத்துக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அதே சமயம், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண வேண்டியது மத்திய அரசின் உடனடிப் பணியாகும். காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டாலே போதும், எந்த இளைஞரும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சுதந்திரத்துக்காக கையில் துப்பாக்கி ஏந்தும் நிலை ஏற்படாது என்கிறார். 

வீட்டில் இருந்து வெளியேறிய அடில் கடந்த ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தான். அதன் பிறகு குடும்பத்தாரை அவர் தொடர்பு கொண்டதே இல்லை. எப்போது அவன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தான் என்பதைக் கூட அவன் சொன்னதில்லை. எனது மகன் உயிரிழந்தது பற்றிக் கூட தெரியவில்லை. உண்மையில் நேற்று மதியம் வீட்டுக்கு காவல்துறையினர் போன் செய்து, புல்வாமா தாக்குதலை நடத்தியது உங்களது மகன் தான் என்று சொன்னபோதுதான் எங்களுக்கேத் தெரியும். 

நான் ஒருபோதும் வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே சமயம், காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணாவிட்டால் இதைவிட மிக மோசமான தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தனது மகனைப் பின்பற்றி பல இளைஞர்கள் பயங்கரவாதத்தில் இணைந்தது பற்றி தார் கூறுகையில், நான் படிக்காதவன், இந்த விஷயத்தை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் மத்திய அரசு நிச்சயம் உணர வேண்டும், அதாவது காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண வேண்டும். விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தனது மகன் ஏன் பயங்கரவாதத்தில் இணைந்தான் என்ற கேள்விக்கு பதிலளித்த தார், பயங்கரவாதத்தில் இணையும் நிலைக்கு இளைஞர்களை இங்கிருக்கும் சூழ்நிலையே அழுத்தித் தள்ளுகிறது. எனது மகன் குறைவாகவே படித்திருக்கிறான். ஆனால் பிஎச்டி படித்த மன்னான் வானி ஏன் பயங்கரவாதத்தில் இணைந்தான். தீர்க்கப்படாத காஷ்மீர் விவகாரம் மற்றும் இங்கிருக்கும் இளைஞர்கள் மோசமாக நடத்தப்படுவது போன்றவையே இதற்குக் காரணம் என்கிறார்.

காந்திபாக் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள ஊர் மக்களும் தாரின் வீட்டுக்கு வந்து தங்களது இரங்கலை அவரது குடும்பத்தாருக்குத் தெரிவித்துச் செல்கின்றனர்.

உயிரிழந்த பயங்கரவாதிக்கான இறுதி தொழுகை நேற்று இரவு நடைபெற்றது. அதிலும் ஏராளமான ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com