"பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவது இந்தியாவின் உரிமை': அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுவது இந்தியாவின் உரிமை': அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் தொலைபேசியில் அழைத்து உரையாடினார்.
 புல்வாமா தாக்குதல் குறித்து தனது கண்டனத்தையும், இரங்கலையும் அவர் தெரிவித்துக் கொண்டார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கான இந்தியாவின் உரிமைக்கு ஜான் போல்ட்டன் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார்.
 மேலும், ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு தருவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியத்தை இரு அதிகாரிகளும் வலியுறுத்தினர்.
 அத்துடன், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பதற்கு உள்ள அனைத்து தடைகளையும் விலக்க இருவரும் உறுதிபூண்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து வாஷிங்டனில் ஜான் போல்ட்டன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் புல்வாமா தாக்குதல் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை இருமுறை அழைத்துப் பேசினேன்.
 அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன்.
 பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் இந்தியாவின் உரிமையை ஆதரிப்பதாக அவரிடம் கூறினேன்' என்றார்.
 முன்னதாக, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு பக்கபலமாக அமெரிக்கா இருக்கும். சர்வதேச அமைதியைக் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் செயலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் பாம்பேயோ குறிப்பிட்டுள்ளார்.
 இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிதிப் போக்குவரத்து மற்றும் சொத்துகளை பாகிஸ்தான் உடனடியாக முடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
 புல்வாமா தாக்குதல் தொடர்பாக, இதுவரை 15 செனட் சபை உறுப்பினர்கள் உள்பட அமெரிக்காவின் 70-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com