காங்கிரஸுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

மக்களவை, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸுக்கும் தங்களது கட்சிக்கும் கூட்டணி உறுதியாகி விட்டதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) தெரிவித்துள்ளது.

மக்களவை, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸுக்கும் தங்களது கட்சிக்கும் கூட்டணி உறுதியாகி விட்டதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜேஎம்எம்) தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செயல் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 மக்களவைத் தேர்தலிலும், ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கும் எங்கள் கட்சிக்கும் கூட்டணி உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியபிறகு, கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
 இதன்படி, கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்கும். மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில், காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிடும். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரûஸ விட ஜேஎம்எம் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடும்.
 இருகட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். எங்களது கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) கட்சிகளும் உள்ளன.
 நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் முக்கிய மாநில கட்சிகள், மகா கூட்டணியை வலுப்படுத்தி வருகின்றன. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற பொதுவான லட்சியத்துக்காக மகா கூட்டணி பணியாற்றுவதை உறுதி செய்யும் பணியில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேஜஸ்வி யாதவ், சரத் பவார், தேவ கௌடா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
 அப்போது ஹேமந்த் சோரனிடம், தேசிய கட்சியான காங்கிரஸ், மகா கூட்டணிக்கு தலைமை வகிக்குமா? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "காங்கிரஸ் கட்சியானது மிகவும் பழைமையான அரசியல் அமைப்பாகும்; நாட்டில் சமகால அரசியலை வடிவமைக்கும் பணியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும்' என்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான், மகா கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளரா? என கேட்கப்பட்டது. அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. அவர் கூறுகையில், "நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாஜகவுக்கு எதிராக முக்கிய பிரச்னைகளை எழுப்புவதில், அவர்தான் முன்னணியில் உள்ளார். மகா கூட்டணியில் காங்கிரஸ், மூத்த சகோதரனுக்குரிய பங்களிப்பை ஆற்ற வேண்டும்' என்றார்.
 ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வென்றது. எஞ்சிய 2 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com