கடந்த 9 ஆண்டுகளில் 1,190 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்: ஆர்டிஐ தகவல்

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் 1,190 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் 1,190 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நொய்டாவைச் சேர்ந்த வழக்குரைஞர் ரஞ்சன் தாமர், தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து இந்தத் தகவலைக் கோரி இருந்தார். அதற்கான பதிலில், 2010 முதல் 2018-ஆம் ஆண்டு வரை நமது நாட்டில் 11,567 நக்ஸல் தாக்குதல்கள், மோதல்கள், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,331 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018-இல் 225 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்து 2016-இல் 222, 2010-இல் 172, 2017-இல் 136, 2013-இல் 100 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினரால் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் படை வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தை மனுதாரர் கோரி இருந்தபோதும், இது தொடர்பான விவரத்தை உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை. நமது நாட்டில் 11 மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்கள இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஆந்திரம், பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நக்ஸல் தாக்குதல் அதிகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நக்ஸல் தாக்குதலில் பலியான பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் பதிலளித்தார். அப்போது, 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை நக்ஸல்களால் 731 பொதுமக்களும், 260 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்துவிட்டனர் என்று கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com