பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான்!: இந்தியா பதிலடி

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ள நிலையில், அவரது கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.


புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ள நிலையில், அவரது கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
மேலும், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பிரதமர் கண்டனம் தெரிவிக்கவில்லை. அந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு இரங்கலும் தெரிவிக்கவில்லை. அந்த கொடூரமான தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என்று அவர் கூறியிருக்கிறார். அது, பாகிஸ்தான் தரப்பிடமிருந்து தெரிவிக்கப்படும் வழக்கமான பதில்தான். இம்ரான் கானின் கருத்தில் வியப்பேதும் இல்லை.
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கமும், தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதியும் பொறுப்பேற்றதை, பாகிஸ்தான் பிரதமர் புறந்தள்ளியிருக்கிறார். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கமும், அதன் தலைவர் மசூத் அஸாரும் பாகிஸ்தானில் செயல்படுவது அனைவரும் அறிந்த உண்மை. இவையே பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்களாகும்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தானிடம் போதிய ஆதாரங்கள் அளிக்கப்பட்டபோதும், 10 ஆண்டுகளாக அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பதான்கோட் தாக்குதல் சம்பவத்திலும் இதே நிலைதான் உள்ளது.
பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு, பாகிஸ்தான் என்று இம்ரான் கான் கூறியுள்ளார். அது தவறானது. பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் மையமாக இருப்பதை சர்வதேச சமூகம் அறியும்.
தேர்தலுடன் தொடர்புபடுத்துவதா?: புல்வாமா பயங்கரவாத தாக்குதலை, மக்களவைத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி, இம்ரான் கான் தெரிவித்துள்ள கருத்துகள் வருந்தத்தக்கவை. ஜனநாயகத்தைப் பொருத்தவரை, உலகுக்கே எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. அதுபற்றியெல்லாம் பாகிஸ்தானால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.
புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். மாறாக, அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். 
தங்களது மண்ணில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை, பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். பயங்கரவாதம், வன்முறைக்கு மத்தியில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com