முன்னாள் முதல்வர்களுக்கு அரசு இல்லம்: பிகார் அரசின் விதியை தள்ளுபடி செய்தது பாட்னா உயர்நீதிமன்றம்

முன்னாள் முதல்வர்களுக்கு அரசு இல்லங்களை அவர்களது ஆயுள்காலத்துக்கும் ஒதுக்குவது தொடர்பான பிகார் அரசின் விதிகளை பாட்னா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.


முன்னாள் முதல்வர்களுக்கு அரசு இல்லங்களை அவர்களது ஆயுள்காலத்துக்கும் ஒதுக்குவது தொடர்பான பிகார் அரசின் விதிகளை பாட்னா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி யாதவுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. இதனிடையே, அந்த 2 கட்சிகளிடையேயான கூட்டணி முறிந்தது. பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்தது. இதைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி துணை முதல்வரானார். இதனால் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் என்ற அந்தஸ்தில் ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தை சுஷில்குமார் மோடிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேஜஸ்வி யாதவுக்கு அவர் வசிக்கும் அரசு இல்லத்தை காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, பாட்னா உயர்நீதிமன்றத்தில் தேஜஸ்வி யாதவ் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த ஒரு நீதிபதி கொண்ட அமர்வு, பிகார் அரசின் உத்தரவை உறுதி செய்ததுடன், தேஜஸ்வி யாதவ் மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, பாட்னா உயர்நீதிமன்றத்தில் தேஜஸ்வி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி அஞ்சனா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு, முன்னாள் முதல்வர்களுக்கு ஆயுள்காலத்துக்கும் அரசு இல்லங்களை ஒதுக்குவது தொடர்பான பிகார் அரசின் விதியை தாமாக எடுத்து விசாரித்தது.
இந்த விவகாரம், பாட்னா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி அஞ்சனா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
முதல்வர் பதவியிலிருந்து சென்றவர்களுக்கு அரசு இல்லங்களை அவர்களது ஆயுள்காலத்துக்கும் ஒதுக்குவது போன்ற வசதிகளை அளிப்பது தவறான நடவடிக்கையாகும். இது அரசியலமைப்பு விரோத நடவடிக்கையாகும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும். இந்த விதிகள் ரத்து செய்யப்படுகிறது.
பிகார் சிறப்பு பாதுகாப்பு குழு (திருத்தம்) சட்டம்-2010ஐ ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது என்பது குறித்து, மாநில அரசு, முன்னாள் முதல்வர்கள் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, ஜெகந்நாத் மிஸ்ரா, சதீஷ் பிரசாத் சிங், ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோர் அரசு இல்லங்களில் வசிக்கின்றனர். பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு, அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
முன்னதாக, உத்தரப் பிரதேச அரசால் முன்னாள் முதல்வர்களுக்கு அரசு இல்லங்கள் ஒதுக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com