சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: ராபர்ட் வதேராவிடம் 3 மணி நேரம் விசாரணை

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட்
தில்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை முடிந்து வெளியே வருகிறார் ராபர்ட் வதேரா. 
தில்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணை முடிந்து வெளியே வருகிறார் ராபர்ட் வதேரா. 


சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய தில்லியின் ஜாம்நகர் பகுதியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஆஜரானார். அவரது வழக்குரைஞர்களும் உடன் வந்தனர். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியதால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறவில்லை. அவர் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராகும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு முன் திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், வதேராவுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
லண்டனின் பிரயன்ஸ்டோன் சதுக்கத்தில், பினாமி பரிவர்த்தனையின் மூலம் சொத்து ஒன்றை வாங்கியதாக வதேரா மீது அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளின் மூலம் மேலும் பல சொத்துகளை அவர் வாங்கியிருக்கலாம் என்று நீதிமன்ற விசாரணையின்போது அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், வெளிநாடுகளில் சட்டவிரோத சொத்துகள் எதுவும் தனக்கு இல்லை என்று ராபர்ட் வதேரா மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி, அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, வதேராவிடம் இந்த மாத தொடக்கத்தில் 3 நாள்கள் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 23 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமையும் அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவர் ஆஜராகவில்லை. இந்தச் சூழலில் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜரானார்.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் நிலம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் வதேராவும், அவரது தாயார் மௌரீனும் ஜெய்ப்பூரில் அமலாக்கத் துறையினர் முன் அண்மையில் ஆஜராகினர். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தன்னை மட்டுமன்றி தனது தாயாரையும் துன்புறுத்துவதாக வதேரா குற்றம்சாட்டியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com