சாரதா நிதி நிறுவன மோசடி: வழக்கு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடுத்துள்ள மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அமர்விலிருந்து நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் விலகியுள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி: வழக்கு விசாரணையிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்


சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடுத்துள்ள மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அமர்விலிருந்து நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் விலகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்ட மூவரை உச்சநீதிமன்றத்துக்கு நேரில் அழைத்து விளக்கம் கோருவது தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், மேற்கு வங்க அரசு சார்பில் வழக்குரைஞராக ஆஜராகி இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார். இதனால், விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்றனர். சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால், நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வில் இடம்பெறவில்லை என்றபோதிலும், நீதிமன்றம் விசாரணையைத் தொடர வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ கூடுதலாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்புகிறது என்று வாதிட்டார்.
இதையடுத்து, மேற்கு வங்க அதிகாரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்தத் தருணத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற சட்டவிதிகளில் இடமில்லை என்றார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாகக் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் வரும் 25-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 27-ஆம் தேதி புதிய அமர்வு முன் நடைபெறும் என்றனர்.
சாரதா நிதி நிறுவன மோசடியை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த ராஜீவ் குமார், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை அளிக்கவில்லை எனவும், அது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும்  சிபிஐ குற்றம் சாட்டியது. சிபிஐ முன் ஆஜராவதை அவர் தவிர்த்து வந்ததையடுத்து, கடந்த 3-ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முயன்றனர். ஆனால், காவல் துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதையடுத்து, மேற்கு வங்க தலைமைச் செயலர் மலை குமார் டே, காவல் துறைத் தலைவர் வீரேந்திர குமார், ராஜீவ் குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர். 
அதில், சிபிஐயின் விசாரணைக்கு ஒருபோதும் தடை ஏற்படுத்தவில்லை என்றும், சிபிஐ அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி ராஜீவ் குமாரை விசாரிக்க முயன்ற காரணத்தினாலேயே சிபிஐ அதிகாரிகளைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com