பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி ஜெய்ப்பூர் சிறையில் அடித்துக் கொலை

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி, சக கைதிகளுடன் ஏற்பட்ட மோதலில் புதன்கிழமை அடித்துக் கொல்லப்பட்டார்.


ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த கைதி, சக கைதிகளுடன் ஏற்பட்ட மோதலில் புதன்கிழமை அடித்துக் கொல்லப்பட்டார்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் இந்த நேரத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து சிறைத் துறை ஐ.ஜி. ரூபிந்தர் சிங் கூறியதாவது:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரைச் சேர்ந்தவர் ஷக்ருல்லா(50). இவருக்கு சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஜெய்ப்பூர் மத்திய சிறையில், தனியறையில் கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து தண்டனையை அனுபவித்து வந்தார். புதன்கிழமை காலை, சக கைதிகளுடன் ஏற்பட்ட மோதலின்போது, பெரிய கல்லால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்தார் என்றார் ரூபிந்தர் சிங்.
ஷக்ருல்லா இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, மூத்த அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் உடனடியாக ஜெய்ப்பூர் சிறைச்சாலைக்கு வந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், காவல் துறை சார்பில் தனியாக விசாரணை நடத்தப்படும் என்றும் மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) கபில் கர்க் கூறினார்.
பாகிஸ்தான் வலியுறுத்தல்: இதனிடையே, ஷக்ருல்லாவின் மரணம் குறித்து இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர், இந்திய அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com