காஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை: 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் நாட்டின் பிற மாநிலங்களில் தாக்குதலுக்கு ஆளாவதாக கூறப்படும்
காஷ்மீரிகள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை: 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் நாட்டின் பிற மாநிலங்களில் தாக்குதலுக்கு ஆளாவதாக கூறப்படும் நிலையில், அதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நிகழ்த்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு பின்னர், நாட்டின் பல பகுதிகளில் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களும், இதர மக்களும் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக தாரிக் அதீப் என்பவர், உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், நாடு முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல், அச்சுச்சுறுத்தல், சமூக புறக்கணிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. காஷ்மீர் மக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த சம்பவங்கள் நிகழ்கின்றன.
எனவே, காஷ்மீர் மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுப்பதற்காக, அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோலின் கோன்சால்வ்ஸ் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு மட்டும் 10 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான  அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இந்த விவகாரத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு விவகாரம், மாநில அரசின் அதிகாரத்துக்கு உள்பட்டது என்றார்.
மாநில அரசுகளுக்கு உத்தரவு: இதையடுத்து, மகாராஷ்டிரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பிகார், ஹரியாணா, மேகாலயம்,  மேற்கு வங்கம், சத்தீஸ்கர், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கும், தில்லி காவல் துறை ஆணையருக்கும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கும் எதிரான தாக்குதல், அச்சுறுத்தல், சமூக புறக்கணிப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள், காஷ்மீர் மக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் தொடர்பான வழக்குகளையும் கையாள்வர். அனைத்து மாநிலங்களிலும் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் விளம்பரப்படுத்த வேண்டும். பாதிப்புக்கு ஆளாகும் காஷ்மீர் மக்கள், அந்த அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.
மேலும், மேற்கண்ட மாநில அரசுகள் தங்களது பதில் அறிக்கையை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மெஹபூபா, ஒமர் வரவேற்பு
காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக சுட்டுரையில் மெஹபூபா வெளியிட்ட பதிவில், வெளிமாநிலங்களில் காஷ்மீர் மாணவர்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், சமூக புறக்கணிப்புக்கு ஆளாகாமல் இருப்பதையும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஒமர் அப்துல்லா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், மத்திய அரசு செய்திருக்க வேண்டியதை, உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது. அதற்காக உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com