விமானத் தொழில் கண்காட்சியில் தீ: 300 கார்கள் எரிந்து நாசம்

பெங்களூரில் நடைபெற்றுவரும் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி வளாகத்தின் வாகன நிறுத்தத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாயின.
பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப் படைத்தளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சியின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமான கார்கள்.
பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப் படைத்தளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சியின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமான கார்கள்.

பெங்களூரில் நடைபெற்றுவரும் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி வளாகத்தின் வாகன நிறுத்தத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாயின.

கர்நாடக மாநிலம், பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமானப் படைத் தளத்தில் பிப்.20-ஆம் தேதி முதல் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மட்டுமன்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.  மேலும், பல்வேறு நாடுகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வான் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றன.  கடந்த 3 நாள்களாக இந்தக் கண்காட்சியைப் பார்வையிட அரசுகள், நிறுவனங்களின் பிரதிநிதிகள்,  வெளிநாட்டு அதிகாரிகள், ஊடகங்கள், குறிப்பிட்ட அழைப்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால்,  சனிக்கிழமை பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். வான்வெளியில் விமானங்கள் நிகழ்த்தும் விமான சாகசங்களைக் காண ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர்.  அவர்களில் பெரும்பாலானோர்,  நுழைவுவாயில் 5-க்கு அருகேயுள்ள அரை ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்தத்தில் கார்களை நிறுத்தி விட்டு, விமான சாகசங்களைக் காண குழந்தைகள்,  உறவினர்களுடன் சென்றுவிட்டனர். ஒரு சிலர் வாடகைக் கார்களில் வந்திருந்தனர். 

தீ விபத்து: இந்த நிலையில், கார்கள் நிறுத்தப்பட்ட இடத்தில் காலை 11.55 மணி அளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீ பரவத் தொடங்கியது. தீப்பொறிக்கு காரணத்தைக் கண்டறிய முடியாவிட்டாலும், தரையில் உலர்ந்த புல் படர்ந்திருந்ததாலும், காற்று வேகமாக வீசியதாலும் தீ வேகமாகப் பரவி கார்களை நாசமாக்கியதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். 

கார்களில் இருந்த ஓட்டுநர்கள் சிலர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தங்கள் கார்களை வேகமாக ஓட்டிச் சென்று வேறு இடங்களில் நிறுத்திவிட்டனர். 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கார்களின் கண்ணாடிகளை கல் கொண்டு உடைத்து,  ஒரு சில கார்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும்,  தீ மளமளவென பரவியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 318 கார்கள் தீயில் கருகி நாசமாயின.  இச் சம்பவம் கார் உரிமையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. கார்கள் நாசமாகியிருந்ததை கண்டு அதன் உரிமையாளர்கள், குழந்தைகள்,  உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுது புலம்பினர்.

விசாரணைக்கு உத்தரவு: இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசு,  இந்திய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர் கூறுகையில்," தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  25 தீயணைப்பு வாகனங்கள், 150 தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இச் சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாயின. ஆனால், உயிர்ச்சேதம் எதுவுமில்லை. 

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசுடன் சேர்ந்து கர்நாடக அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  சேதங்களை ஆய்வு செய்வதற்கு சிறப்பு ஆய்வாளர் அணி அமைக்கப்பட்டுள்ளது.  இதன் வாயிலாக கார்களை இழந்தோருக்கு காப்பீடுத் தொகை விரைந்து பெற உதவி செய்யப்படும்.  

விபத்தில் வாகனப் பதிவு உரிமம், ஓட்டுநர் உரிமங்களை இழந்தோருக்கு மாநில போக்குவரத்துத் துறை சார்பில் நகல் ஆவணங்கள் அளிக்கப்படும்.  தீ விபத்து தொடர்பான விதிகளைத் தளர்த்த காப்பீட்டு நிறுவனங்களை அறிவுறுத்துமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் விமானத் தொழில் கண்காட்சிக்கு வாகனங்களை நிறுத்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com