அருணாசலத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 6 சமூகத்தினருக்கு நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் வழங்கும் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மாநில துணை முதல்வர் சௌனா மெயின்
இடாநகரில் ஏற்பட்ட வன்முறையை ஞாயிற்றுக்கிழமை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர்.
இடாநகரில் ஏற்பட்ட வன்முறையை ஞாயிற்றுக்கிழமை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர்.

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 6 சமூகத்தினருக்கு நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் வழங்கும் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மாநில துணை முதல்வர் சௌனா மெயின் இல்லத்துக்கு தீ வைத்தனர்.
அருணாசல் முதல்வர் பெமா காண்டுவின் இல்லத்தை ஞாயிற்றுக்கிழமை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் எச்சரித்தனர். 
அதையும் மீறி முதல்வர் இல்லம் நோக்கி முன்னேறிச் செல்ல முயன்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 இளைஞர்கள்  உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.
போலீஸார் கூறியதாவது:
6 சமூகத்தினருக்கு நிரந்தர குடியுரிமைச் சான்றிதழ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஆவேசம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தினர்.
இடாநகரில் உள்ள காவல் துறை துணை ஆணையரின் அலுவலகமும் சூறையாடப்பட்டது.
அலுவலகம் அருகே இருந்த வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன. துணை முதல்வரின் சொந்த இல்லத்துக்கும் அவர்கள் தீ வைத்தனர்.
இடாநகர், நாகர்லகன் ஆகிய நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் இயந்திரங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் தற்போது வரை 60க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும், 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதி காக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டுவிடம் தொலைபேசியில் பேசி சூழ்நிலை நிலவரம் குறித்தும் அறிந்து கொண்டார்.
அருணாசலில் நேரிட்ட வன்முறைக்கு அந்த மாநில காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "அருணாசல் மக்கள் அமைதி காக்க வேண்டும்' என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
அருணாசலில் துணை ராணுவம்: இதனிடையே, அருணாசலப் பிரதேசத்துக்கு இந்தோ திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 1,000 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகம் கேட்டுக் கொண்டதால், தலா 100 துணை ராணுவ வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் அருணாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து: அருணாசலில் 6 சமூகத்தினருக்கு நிரந்தர குடியுரிமை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உயர்மட்டக் குழு அளித்த பரிந்துரைகளை மாநில அரசு ஏற்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், "அந்தப் பரிந்துரைகளை ஏற்க வேண்டாம் என்று அருணாசல் அரசு உத்தரவு பிறப்பித்துவிட்டது. தேவையில்லாமல், காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட பிரிவு மக்களை தூண்டி விடுகிறது. வன்முறையில் உயிரிழப்பு நேரிடுவது துரதிருஷ்டவசமானது. 
அனைவரும் அமைதியான சூழலுக்கு திரும்ப வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com