பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மோடியால் மட்டுமே முடியும்: அமித் ஷா 

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். 
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மோடியால் மட்டுமே முடியும்: அமித் ஷா 

"பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். 
மேலும், "இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலையை உறுதி செய்வோம்' என்றும் அவர் கூறினார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் அமித் ஷாவின் இந்த வாக்குறுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில், அமித் ஷா பங்கேற்றார். அப்போது, பயங்கரவாதம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசியதாவது:
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உயிர்த்தியாகம் வீண்போகாது. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ளமாட்டோம். பயங்கரவாதிகளை தண்டிப்பதற்கான முழு சுதந்திரத்தையும் நமது பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் மோடி அளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கவும், நாடு எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும் அவரால் மட்டுமே முடியும். 
ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு, மாநில மக்களின் நலன்கள் மீது அக்கறை கிடையாது. லடாக், ஜம்மு பிராந்தியங்களுக்கு முந்தைய அரசுகள் அநீதியே இழைத்துள்ளன. இப்பிராந்தியங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த கட்சிகள் தங்களது சுய நலனுக்காகவே பயன்படுத்தின. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான், இப்பிராந்தியங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தியது.
எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி: எதிர்க்கட்சிகள் அமைக்க திட்டமிட்டுள்ள மகாக் கூட்டணியின் தலைவராக செயல்படப்போவது யார் என்ற கேள்வியை கேட்டு கேட்டு நான் ஓய்ந்துவிட்டேன். ஆனால் யாரும் எந்த பதிலும் கூறவில்லை. அரசியல் ஆதாயத்துக்காக அமைக்கப்படும் அந்தக் கூட்டணியால் நாட்டுக்கு எந்த பயனும் கிடைக்காது.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பி வருகிறார். காஷ்மீரின் தற்போதைய சூழலுக்கு, முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மேற்கொண்ட பல்வேறு தவறான முடிவுகள்தான் காரணம். அதேசமயம், இந்தியாவிலிருந்து ஜம்மு-காஷ்மீர் பிரிய நாங்கள் (பாஜக) ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றார் அமித் ஷா.
அஸ்ஸாமில் உண்மையான இந்தியர்களை கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர், அதுபோன்ற நடவடிக்கை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மேற்கொள்ளப்படும்; இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர் ஒருவர் கூட இல்லை என்ற நிலையை உறுதி செய்வோம் என்றார்.
பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் ஷியாமா பிரசாத், உயிர்த்தியாகம் செய்த இடம் ஜம்மு-காஷ்மீர் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதற்கு எதிராக போராடி வந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி, கடந்த 1953-இல் காஷ்மீருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com