ரூ.40 லட்சம் வரை வருவாய் ஈட்டும் சிறுதொழில்களுக்கு வரி விலக்கு: ஜிஎஸ்டி வர்த்தக வரம்பு உயர்வு

சிறுதொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பை ரூ.40 லட்சமாக ஜிஎஸ்டி கவுன்சில் வியாழக்கிழமை
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வருவாய் துறைச் செயலர்
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வருவாய் துறைச் செயலர்


சிறுதொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு வரம்பை ரூ.40 லட்சமாக ஜிஎஸ்டி கவுன்சில் வியாழக்கிழமை அதிகரித்தது.
முன்னதாக, அந்த வரி விலக்கு வரம்பானது இதர மாநிலங்களுக்கு ரூ.20 லட்சமாகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.10 லட்சமாகவும் இருந்த நிலையில், தற்போது அது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடையவுள்ளன. 
இந்த வரி விலக்கு வரம்பு உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.5,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோல், ஆண்டு வருவாயாக ரூ.1.5 கோடி வரை ஈட்டும் நிறுவனங்களையும் காம்பொசிஷன் வரி திட்டத்தின் கீழ் அனுமதித்த முடிவு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது. 
முன்னதாக, ஆண்டு வருவாய் ரூ.1 கோடி ஈட்டிய நிறுவனங்கள் மட்டுமே காம்பொசிஷன் வரி விதிப்பு திட்டத்தின் கீழ் இருந்த நிலையில், ரூ.1.5 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களையும் அத்திட்டத்தில் கொண்டுவர கடந்த நவம்பர் மாதம் முடிவு செய்யப்பட்டிருந்தது. 
காம்பொசிஷன் திட்டத்தின் கீழ், சலுகை அடிப்படையில் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒரு சதவீதமும், உணவகங்கள் 5 சதவீதமும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். மற்ற நிறுவனங்கள் மாதாந்திர அடிப்படையில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த வேண்டும். 
இதர நிறுவனங்கள் விரிவான வரவு-செலவு கணக்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டிய நிலையில், காம்பொசிஷன் திட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் விரிவாக கணக்குப் பதிய வேண்டிய அவசியமில்லை. 
கேரளத்துக்கு அனுமதி: வெள்ளத்தால் கடந்த ஆண்டு பேரிடரைச் சந்தித்த கேரள மாநிலம், ஒரு சதவீதம் உள்மாநில உபரி வரியாக 2 ஆண்டுகளுக்கு வசூலித்துக்கொள்ளவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 32-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, மேலும் கூறியதாவது:
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரையில் வருவாய் ஈட்டும் நிறுவனங்களும் காம்பொசிஷன் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி அவை 6 சதவீத வரி செலுத்த வேண்டியிருக்கும். 
காம்பொசிஷன் திட்டத்தின் கீழ் வரி செலுத்தும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால் போதுமானது. எனினும், அவை தங்களது வரியை காலாண்டுக்கு ஒருமுறையாக செலுத்த வேண்டும்.
காம்பொசிஷன் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய முடிவுகளால், அரசுக்கு ரூ.3,000 கோடி வரையில் அரசுக்கு லாபம் கிடைக்கும்.
இந்த ஒவ்வொரு முடிவுகளுமே சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுக்கு பல்வேறு வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனம் சேவைத் துறை சார்ந்ததாக இருந்தால் காம்பொசிஷன் திட்டத்தில் 6 சதவீத வரி வரையறையின் கீழ் வரலாம்.
ரூ.1.5 கோடி வரையில் ஆண்டு வருவாய் ஈட்டும் உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனமாக இருந்தால், காம்பொசிஷன் திட்டத்தில் 1 சதவீத வரி வரையறையின் கீழ் வரலாம். தங்களது வருவாய்க்கு ஏற்ப ரூ.40 லட்சம் வரையில் வரி விலக்கு பெறலாம். 
சிறுதொழில் நிறுவனங்களின் வரி விலக்குக்கான வரையறை ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்களது வரி மதிப்பீட்டு முறை பாதிக்கப்படுவதாக மாநிலங்கள் தெரிவித்தன. அதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் தகவல் அளிக்கும் பட்சத்தில், மாற்று மதிப்பீட்டு முறைகள் வழங்கப்படும்.
இது ஒருமுறை வரி விலக்காகும். இதனால், மாநிலங்களிடையேயான தொழில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
மனை வணிகத் தொழில்: மனை வணிகத் தொழிலுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை நிர்ணயிக்கும் விவகாரத்தில் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அந்த விவகாரத்தில் முடிவெடுக்க 7 அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. 
அதேபோல், லாட்டரி விவகாரத்திலும் அமைச்சர்கள் குழு ஒன்று முடிவு மேற்கொள்ளும் என்று அருண் ஜேட்லி கூறினார்.
வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே கூறுகையில், ரூ.40 லட்சம் ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு என்பது, மாநிலத்துக்குள்ளாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு பொருந்தும். மாநிலங்கள் இடையே வர்த்தகம் செய்யும் நிறுவனத்துக்கு பொருந்தாது. தற்போதைய நிலையில் ரூ.20 லட்சம் ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அத்தகைய சுமார் 10.93 லட்சம் நிறுவனங்கள் வரி செலுத்தி வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com