அலோக் குமார் வர்மா ராஜிநாமா

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்ட அலோக் குமார் வர்மா, தனது பணியைத் தொடர மறுத்து வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.
அலோக் குமார் வர்மா ராஜிநாமா


சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து தீயணைப்புத் துறைக்கு மாற்றப்பட்ட அலோக் குமார் வர்மா, தனது பணியைத் தொடர மறுத்து வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார். ஏற்கெனவே ஓய்வு பெறும் வயதை எட்டி விட்டதால் தன்னை ஓய்வு பெற்றவராகக் கருத வேண்டும் என்று கூறி, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
1979-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவரது பதவிக்காலம், வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எனக்கு எதிராக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் (சிவிசி) புகார் கொடுத்தவரே (ராகேஷ் அஸ்தானா) சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ளார். அவர் கொடுத்த புகாரை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிக்கையாகத் தயாரித்து, பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழுவுக்கு அனுப்பி வைத்து விட்டது. ஆனால், இந்த உண்மை தெரியாமல், பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
புகார் கொடுத்தவர் (ராகேஷ் அஸ்தானா) ஒருமுறை கூட இந்த விசாரணையைக் கண்காணித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் முன்னிலையில் நேரில் ஆஜராகவில்லை. ஜனநாயகத்தின் குறியீடாகவும், வலிமை பொருந்திய அமைப்பாகவும் உள்ள சிபிஐ, நாட்டின் மிக முக்கிமான அமைப்பாகும்.
இனி வரும் காலத்தில், எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், அவர்களால் நியமிக்கப்படும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை வைத்து சிபிஐ அமைப்பை கட்டுப்படுத்தலாம் என்பதற்கு என் மீதான நடவடிக்கையே உதாரணமாக இருக்கும்.
ஐபிஎஸ் அதிகாரியாக எனது 40 ஆண்டுகால பொது வாழ்வில் நேர்மையுடன் பணியாற்றியுள்ளேன். தில்லி காவல் துறை ஆணையர், தில்லி சிறைத் துறை இயக்குநர், சிபிஐ இயக்குநர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளேன். நான் பணியாற்றிய துறைகளில் பல்வேறு சாதனைகளைப் படைக்க உதவிய அதிகாரிகளுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதியே ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டேன். எனினும், சிபிஐ இயக்குநராக, 2019 ஜனவரி 31-ஆம் தேதி வரை பொறுப்பு வகிக்க நியமிக்கப்பட்டேன். 
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் நீடிக்காத நிலையில், தீயணைப்புத் துறை இயக்குநர் பொறுப்பை ஏற்பதற்கான வயதை கடந்து விட்டேன். ஏற்கெனவே ஓய்வு பெறும் வயதை எட்டி விட்டதால் என்னை ஓய்வு பெற்றவராகக் கருத வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அலோக் குமார் வர்மா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தனக்கு வேண்டாதவர் சுமத்திய தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அலோக் குமார் வர்மா, பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை இரவு கூறினார். 
நியமனங்கள் ரத்து: முன்னதாக, சிபிஐ இயக்குநராக கடந்த புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்ற அலோக் குமார், 77 நாள்களுக்குப் பிறகு தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு வந்தார். அன்றைய தினம், இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த பணியிடமாற்ற உத்தரவுகளை ரத்து செய்தார். இந்நிலையில், இடைக்கால இயக்குநராக மீண்டும் வியாழக்கிழமை பொறுப்பேற்ற நாகேஸ்வர ராவ், அலோக் குமார் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றார்.
பின்னணி: அலோக் குமார் வர்மாவும், சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து, இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை கடந்த செவ்வாய்க்கிழமை ரத்து செய்ததுடன் அவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கி தீர்ப்பளித்தது. 
எனினும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அவர் பதவியில் தொடர்வது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான குழு முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் சார்பில், அவரால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோரைக் கொண்ட குழு வியாழக்கிழமை கூடி விவாதித்தது. கூட்டத்தின் முடிவில், அலோக் குமார் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர். ஆனால், அதற்கு கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். எனினும், அலோக் குமார் வர்மாவுக்கு எதிராக பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவெடுத்ததால், சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்தப் பணியில் தொடர்வதற்கு அலோக் குமார் மறுப்பு தெரிவித்து விட்டார்.
காங்கிரஸ் விமர்சனம்: சிபிஐ அமைப்பு, கூண்டுக்கிளி என்பதை பிரதமர் மோடி தலைமையிலான குழு உறுதிசெய்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com