எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது தலைவர் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி: பாஜக தேசிய கவுன்சில் குழு தீர்மானம்

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி, தலைவர் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி என்று பாஜக தேசிய கவுன்சில் குழு தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது தலைவர் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி: பாஜக தேசிய கவுன்சில் குழு தீர்மானம்

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி, தலைவர் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி என்று பாஜக தேசிய கவுன்சில் குழு தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 தில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 தற்போது எதிர்க்கட்சிகள் அமைத்து வரும் மகா கூட்டணி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நிலையில்லாத அரசு அமையவே வாய்ப்புள்ளது. இதற்கு கடந்த 1990ஆம் ஆண்டுகளில் 4 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை குறுகிய காலம் பதவியில் இருந்த அரசுகளை உதாரணமாக தெரிவிக்கலாம். அப்போது சந்திரசேகர், ஹெச்.டி. தேவெ கௌடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்தனர்.
 எனவே வரும் மக்களவைத் தேர்தலில், நிலையான அரசு வேண்டுமா? அல்லது நிலையில்லாத அரசு வேண்டுமா? நேர்மையான மற்றும் துணிச்சலான தலைவர் வேண்டுமா? அல்லது தலைவர் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டணி வேண்டுமா? எதற்கும் உதவாத (பயன்படாத) அரசு வேண்டுமா? அல்லது வலுவான அரசு வேண்டுமா? என்பதை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை நாடுதான் தீர்மானிக்க வேண்டும்.
 மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடி அரசு, நிலையான ஆட்சியை தந்துள்ளது. இதனால் இந்தியா வளர்ச்சியடைந்து, உலகில் வளர்ந்து வரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. பிரதமரும், உலகத் தலைவராக விளங்குகிறார்.
 பாஜக ஆளும் மாநிலங்களில் வளர்ச்சியிலும், நல்ல நிர்வாகத்திலும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இருந்து கட்சியினர் பாடம் கற்க வேண்டும். இது மக்களவைத் தேர்தலில் கட்சியினரை புதிய சக்தியுடன் பணியாற்றத் தூண்டும்.
 எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி, நகைச்சுவை கூட்டணியாகும். பிரதமர் மோடி, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்வதற்கு, விரக்தி, முரண், சந்தர்ப்பவாதம் ஆகியவை மகா கூட்டணி அமைத்துள்ளன. இந்தியாவின் நலனுக்காகவோ அல்லது இந்திய மக்களின் நலனுக்காகவோ அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. பிரதமர் மோடி மீது இருக்கும் வெறுப்பு மட்டுமே, அவர்களை இணைத்துள்ளது. சந்தர்ப்பவாத கூட்டணியின் செயல்பாடுகளில் இருந்து பலமுறை இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை மீண்டும் மக்கள் தேர்வு செய்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. இதை உறுதி செய்வதற்கு, தேர்தலில் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்று, இந்தியாவை சிறப்பான நாடாக உருவாக்கும் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக வேண்டுகோள் விடுக்கிறது. குறிப்பாக, புதிய வாக்காளர்களுக்கு இந்த வேண்டுகோளை பாஜக விடுக்கிறது என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இதை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com